பாஜக கூட்டணியில் அதிமுக- மத்திய அமைச்சரவையில் இடம்? ரேஸில் ஜெயிக்கப் போகும் சிவி சண்முகம்?
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு சந்தித்ததைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி உறுதியானது. இந்த நிலையில் அதிமுகவை தக்க வைத்துக் கொள்ள மத்திய கூட்டணி அரசில் அக்கட்சிக்கு இணை அமைச்சர் பதவியை பாஜக தரக் கூடும் என்றும் தற்போதைய நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பி சிவி சண்முகத்துக்கு இணை அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறையும் வரை பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்காமலேயே இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை மறைமுகமாக டெல்லி பாஜக மேலிடமே கட்டுப்பாட்டில் கொன்டு வந்தது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளை டெல்லி பாஜக மேலிடம்தான் ஒருங்கிணைத்தும் வைத்தது.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், அதிமுக தலைவர்கள் மீதான கடுமையான விமர்சனங்களால் இந்த கூட்டணி நீடிக்காமல் போனது. லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தன. இதனையடுத்து பாஜக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அதிமுகவில் குரல்கள் வலுவடைந்தன; பாஜகவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கை கோர்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேரவே மாட்டோம் என கூறி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக மீண்டும் திரும்பிவிட்டது உறுதியாகிவிட்டது. அதிமுக, பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் கூட டெல்லி சந்திப்புகளில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள டெல்லி மேலிடம், இணை அமைச்சர் பதவி எனும் வலையை வீசியிருக்கிறதாம். இதற்கும் அதிமுக தரப்பு ஓகே சொல்லிவிட்டதாம். அதிமுகவில் லோக்சபா எம்பிக்கள் யாரும் இல்லை; ராஜ்யசபாவில் சீனியர்களான தம்பிதுரையும் சிவி சண்முகமும் உள்ளனர். இவர்களில் தம்பிதுரையின் பதவி காலம் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. இதனால் பாஜக தரப் போகும் மத்திய இணை அமைச்சர் பதவி சிவி சண்முகத்துக்குதான் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அமித்ஷா, ஜேபி நட்டாவுடனான சந்திப்புகளில் தம்பிதுரையும் சிவி சண்முகமும் உடனிருந்ததும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications