அடுத்து அதிமுக? “விடமாட்டோம்” எடப்பாடிக்கு ‘ஷாக்’ கொடுத்த அண்ணாமலை.. ஈபிஎஸ் டீம் ரியாக்ஷனை பாருங்க!
சென்னை : இந்த ஊழல் பட்டியல் முதல் பார்ட்டோடு முடியப்போவதில்லை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரையின் ரியாக்ஷன் என்ன என்று பார்ப்போம்..!
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தனது ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். திமுக ஊழல் பட்டியல் பாகம் ஒன்றோடு முடியப்போவதில்லை, தமிழ்நாட்டில் எந்தக் கட்சியெல்லாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வரப்போகிறேன் எனத் தெரிவித்தார் அண்ணாமலை.

நீங்கள் நினைப்பீர்கள் இவர் ஒரு கட்சியை மட்டும் எதிர்ப்பார் என்று, அனைத்தையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளிக்கொண்டு வருவேன். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் அனைவரையும் மொத்தமாக எதிர்ப்போம். எதிர்க்கக்கூடாது என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான் என ஆவேசமாகப் பேசினார்.
ஆட்சியில் இருந்த எல்லா கட்சியும் : தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எல்லா கட்சிகளின் சொத்துப் பட்டியலையும் 2024 தேர்தலுக்குள் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி உள்ள நிலையில் அவர் அதிமுக அமைச்சர்களின் ஊழல் மற்றும் சொத்துப் பட்டியலையும் வெளியிட உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்னை மாற்ற வேண்டும் என்றால் டெல்லி சென்று மாற்றிவிட்டு வாருங்கள். யாருக்கும் பயந்தோ, பணிந்தோ குனிந்தோ, இவர்கள் தயவில் எம்.பி ஆக வேண்டும் என்றோ நான் வரவில்லை. 10 தேர்தலில் தோற்றாலும் இங்குதான் நிற்பேன் என்ற அண்ணாமலையின் ஆவேச பேச்சு அதிமுக மீதான அட்டாக் எனக் கூறப்படுகிறது.
அதிமுக ரியாக்ஷன் : இந்நிலையில், அதிமுக ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, "திமுக என்பது ஊழல், அராஜக அரசியல், குடும்ப அரசியல் கட்சி. இதைத்தான் அண்ணாமலை திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாக வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல.
திமுகவின் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இதற்காகதான் எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கினார். அதில் ஜெயலலிதா அரசியல் வாரிசாக வந்தார். அதன் பிறகு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அதிமுகவில் குடும்ப அரசியல் கிடையாது. அதிமுக ஜனநாயக முறைப்படி இயக்கும் ஒரு இயக்கம். ஊழலுக்கு பெயர் போன கட்சி தான் திமுக.
ஒரே கட்சி திமுக : எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக அராஜகத்தில் எவ்வாறு ஈடுபட்டதோ, அதேபோல் ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியாகவும் ஊழல் மிகுந்த கட்சியாகவும் திமுக செயல்பட்டு வருகிறது. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என இந்தியாவிலேயே தொடர்ச்சியாக குடும்பமாக செயல்பட்டு வரும் ஒரே கட்சி தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக தான். இது ஜனநாயகாத்திற்கு முரணாக செயலாகும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், பூச்சிக்கொல்லி ஊழல் ஆகிய ஊழல்களை செய்த கட்சி திமுக என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நல்ல கூட்டணியை அமைப்பார். ஊழல், குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் திமுகவை அகற்ற பாடுபட்டு வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை அதிமுகவை சொன்னாரா? தமிழ்நாட்டில் எந்த கட்சியெல்லாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, "முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் என்று திமுகவை தான் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications