கொடநாடு சம்பவங்கள் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது.. சீமான்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா தொடர்பாக நடைபெறும் அனைத்து சம்பவங்களும் திகில் படம் போல் உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் திகில் படம் போல் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் மாதம் கொலைசெய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிவிட்டு, பங்களாவுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்த பொருட்கள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் முக்கிய நபராக கருதப்பட்ட சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அதே நாளில் கனகராஜின் நண்பர் சயான் விபத்தில் சிக்கினார். மனைவி குழந்தைகள் உயிரிழந்த நிலையில் சயான் படுகாயங்களுடன் தப்பினார்.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொடநாடு பங்களா தொடர்பாக அடுத்தடுத்து மர்ம சம்பவங்கள் அரங்கேறி கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, ஊழியர் தற்கொலை சம்பவங்கள் சினிமா திகில் படம் பார்ப்பது போல உள்ளது என்றார்.
காவலாளி ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கே விடை இல்லை. அங்கு நடக்கும் அனைத்தும் மர்மமாகவே உள்ளது என்றும் சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications