கிராம நத்தம் இணையவழி பட்டா மாறுதல்.. நில அளவை விவரங்கள்.. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செம அறிவிப்பு
மயிலாடுதுறை: கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நத்தம் பகுதிகளையும் தெரிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. 245 தாலுகாவில் உள்ள கிராமங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் அமலில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.. நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது.

கிராமங்களிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ அல்லது நகரங்களிலோ நீண்ட காலமாக நத்தம் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்து, அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், நத்தம் பட்டா வேண்டி தாராளமாக விண்ணப்பிக்கலாம்..
அதேபோல, நீங்கள் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து, வீடுகட்டி உங்களுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும், அந்த வீட்டிற்கான ரசீது, எத்தனை வருடம் அந்த வீட்டில் அல்லது அந்த இடத்தில் அனுபவம் செய்து வந்தீர்கள் மற்றும் அதற்கான மின் இணைப்பு மற்றும் இதர ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
ஆட்சேபனையற்ற நிலம்: நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு இடத்திற்கு வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்போது, அந்த இடமானது ஆட்சேபனையற்ற நிலமாக இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அந்த இடத்தை வருவாய் ஆய்வாளர், விஏஓ நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். சம்பந்தப்பட்ட அந்த இடம், பொது இடம் கிடையாது, நீர்நிலைக்கு அருகில் இல்லை, ஆட்சேபனையற்ற இடம், மேய்ச்சல் புறம்போக்கு கிடையாது என அனைத்தையும் ஆய்வு செய்து, இறுதியாக ஒரு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின்படியே, வட்டாட்சியர் நத்தம் வீட்டுமனை பட்டா வழங்குவார்கள்
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிக்கை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இணையதளம்: அதில், "நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 4.3.24 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு துறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய தாலுகாவில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையதளம் (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதன் அடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நில அளவை: நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் தமிழ்நிலம் செயலி மூலம் நிலஅளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications