அப்பல்லோவில் ஜெயலலிதா... அம்மா கடையில் விற்பனை படு ஜோர்
சென்னை: அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோவிற்கு வந்து செல்கின்றனர்.
ஜெயலலிதா பற்றி கிராமங்களில் வதந்தி பரவுவதால் பதற்றமடையும் தொண்டர்கள் சென்னைக்கு வந்து அவர் நலம் பெற மருத்துவமனை வாசலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
ஜெயலலிதாவைக் காண தொண்டர்கள் மட்டுமல்லாது பிரபல அரசியல் தலைவர்களும் வந்து உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு செல்கின்றனர். கூடவே செய்தியாளர்களை சந்தித்து விசாரித்தவற்றை விளக்கிவிட்டு செல்கின்றனர்.

அப்பல்லோ தலைமைச் செயலகம்
அப்பல்லோ மருத்துவமனையே மினி தலைமைச் செயலகமாக மாறி விட்டது. தொண்டர்களின் வருகை அதிகரித்து வருவதால் அப்பல்லோ வாசலில் 'அம்மா கடை' முளைத்துள்ளது. இந்த கடையில் ஜெயலலிதாவின் படங்கள், ஜெயலலிதா படம் போட்ட பேனா, டாலர்கள், மோதிரம், கார்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அம்மா கடை விற்பனை
மருத்துவமனைக்கு வரும் அதிமுக தொண்டர்கள் இந்த அம்மா கடைக்கும் விசிட் அடிக்கின்றனர். பேண்ட், ஜெயலலிதா படம் போட்ட செயின்கள், படங்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 3 வாரங்களாக இங்கு கடை போட்டுள்ள இந்த விற்பனையாளர் சராசரியாக 2000 ரூபாய் சம்பாதிக்கிறாராம். 20 ரூபாய் உள்ள பேனா முதல் அம்மா கீ செயின், 150 ரூபாய் மதிப்புள்ள டாலர்களும் இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் பேனாவும், கீ செயினும்தான் அதிகம் விற்பனையாகிறதாம்.

காத்திருக்கும் தொண்டர்கள்
வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்கள் யாரும் உடனே கிளம்பி சென்று விடுவதில்லை. மருத்துவமனை வாசலில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்கின்றனர். கிடைத்த இடத்தில் உறங்கி, அருகில் உள்ள உணவகங்களில் சாப்பிட்டு பொழுதை போக்குகின்றனர். பலரது முகங்களிலும் கவலை சூழ்ந்துள்ளது. அம்மா எப்போது வருவார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

தொண்டர்கள் நம்பிக்கை
கடந்த 10ம் தேதி அப்பல்லோ அறிக்கை வெளியானது. கடந்த 5 நாட்களாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. நேற்றிரவு தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா வந்து நம்பிக்கை தரும் விதமாக செய்தியாளர்களிடம் பேசினார். அதைக் கேட்ட தொண்டர்கள் சிலர் உற்சாமடைந்தனர்.

நலம் பெற வேண்டுதல்
லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நாளை முதல் சிங்கப்பூர் டாக்டர்களும் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே இப்போது அனைவரின் பிரார்த்தனை, வேண்டுதலாக உள்ளது.












Click it and Unblock the Notifications