மேட்டூர் அருகே இளைஞர் சரமாரி வெட்டி கொலை - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
மேட்டூர்: மேட்டூர் அருகே பட்டப்பகலிலேயே இளைஞர் ஒருவர் சரமாரி வெட்டி கொல்லப்பட்டதால், பொதுமக்கள் பீதியில் தலைதெறிக்க ஓடினார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 22. இவர் இன்று காலை வெளியில் புறப்படுவதற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார்.

வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கொண்ட கண்ணனை வழிமறித்தனர். இதனால் அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். ஆனாலும், அவர்கள் விடாமல் கண்ணனை துரத்தி வந்தனர்.
பின்னர் இவர் மோட்டார் சைக்கிளை விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள கண்ணன் சாலையில் இறங்கி ஓடினார். ஆனால் அவர்கள் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். வெட்டுப்பட்ட காயங்களுடன் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் கண்ணன் புகுந்து தாளிட்டுக் கொண்டார்.
எனினும் பின்னாலேயே வந்த 2 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து கண்ணனை சரமாரியாக தாக்கினார்கள். அப்போதும் ஆத்திரம் தீராமல் அரிவாளாலும் வெட்டினார்கள்.
இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த 2 பேரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்த கொலை சம்பவத்தினை கண்ட பொதுமக்கள் பீதியடைந்து, தலைதெறிக்க ஓடினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
