For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் - அன்புமணி ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகள் இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.37 உயர்த்தப்பட்டு ரூ.63.02-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.78 உயர்த்தப்பட்டு ரூ.54.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விலை உயர்வு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Anbumani Ramadoss condemns petrol price hike

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நாளில் இருந்து பெட்ரோல், டீசல் விலை கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டு வருகிறது. எரிபொருள் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பதில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை.

கச்சா எண்ணெய் விலை அதிகமாக குறையும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவாக குறைக்கப்படுவதும், கச்சா எண்ணெய் விலை குறைவாக உயரும் போது, பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உயர்த்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டன. இப்போதும் கூட அப்படித்தான் மிக அதிகமாக விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் தங்களின் வருவாயை அதிகரிப்பதற்கு ஆரோக்கியமான வழிமுறைகளை காணாமல், ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படுத்தும் எரிபொருள் மீது விருப்பம் போல வரியை சுமத்துவது நல்லாட்சிக்கு அடையாளமல்ல. உதாரணமாக இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ.23.79 மட்டுமே. அதன்மீது மத்திய, மாநில அரசுகளின் வரி ரூ.26.67, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ரூ.2.53, சில்லறை விற்பனையாளர்களின் லாபம் ரூ.1.45 சேர்த்து ரூ.54.43-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.23.79 மதிப்புள்ள பொருள் ரூ.30.64 லாபம் சேர்த்து விற்கப்படுகிறது.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியின் அளவு இன்னும் அதிகமாகும். உண்மையில் டீசலை விட பெட்ரோலின் உற்பத்திச் செலவு சற்று குறைவு தான். ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.23.53 மட்டுமே. இதன்மீது மத்திய, மாநில அரசுகளின் வரியாக ரூ.34.52, எண்ணெய் நிறுவன லாபம் ரூ.2.68, சில்லறை விற்பனையாளர்களின் லாபம் ரூ.2.29 சேர்த்து ரூ.63.02-&க்கு விற்கப்படுகிறது. பெட்ரோலின் அடக்கவிலை ரூ.23.53 எனும் நிலையில் அதன் மீது 167 விழுக்காடு வரிகள் மற்றும் லாபம் சேர்த்து விற்பனை செய்வது தான் மக்கள் நல பொருளாதாரமா? என அரசு விளக்க வேண்டும்.

கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. அந்த வரி விகிதம் குறைக்கப்படாததால் இந்த ஆண்டும் மத்திய அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வருவாய் முழுவதும் மக்களுக்கு சேர வேண்டியதாகும்.

ஆனால், அதை இழக்க தயாராக இல்லாத மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் மக்கள் மீது சுமையை சுமத்துவது சரியல்ல. இது குடியரசுக்கான இலக்கணத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுமட்டுமின்றி, டீசல் விலை உயர்வால் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் செய்யப்பட்ட கலால் வரி உயர்வை திரும்பப்பெற்று, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

English summary
PMK Youth Wing Leader and Dharmapuri MP Anbumani Ramadoss condemned to petrol, disel price hike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X