அம்மா.. பங்காரு அடிகளாருக்கு பிரதமர் மோடி எழுதிய இரங்கல் குறிப்பு.. மனைவியிடம் ஒப்படைப்பு.. விபரம்
செங்கல்பட்டு: மறைந்த பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை இன்று மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் குறிப்பை அவர்கள் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவாகவும் இருந்தவர் பங்காரு அடிகளார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மொத்தம் 15க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் பெரிய அளவில் புரட்சியை இவர் செய்தார். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வந்தார். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.
இந்நிலையில் தான் 82 வயது நிரம்பிய பங்காரு அடிகளார் மாரடைப்பால் மறைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கதறி அழுதனர். அதன்பிறகு பங்காரு அடிகளார் அருள்வாக்கு சொன்னபடியே கோவில் கருவறைக்கும், புற்று மண்டபத்துக்கும் நடுவில் நின்ற நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதுதவிர பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர் மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன்பிறகு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி எழுதிய இரங்கல் கடிதத்தை எல் முருகன், அண்ணாமலை ஆகியோர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியிடம் வழங்கினர். அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பங்காரு அடிகளாரின் மறைவு பற்றி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்த துயரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை குடும்பத்துக்கு தெரிவித்து கொள்கிறேன். உயர்ந்த ஆன்மிக தலைவராக பங்காரு அடிகளார் மக்களுக்கு இருந்தார். உத்வேகம் அளிக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தார். கருணை குணத்தால் பக்தர்களால் ‛அம்மா' என அழைக்கப்பட்டார்.

இந்த மனிதர்களின் முன்னேற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும் அவர் வாழ்க்கையை ஆன்மிக வழியில் அர்ப்பணித்தார். இந்த தொண்டுகளுக்காக அவர் என்னென்றும் நினைவுக்கூறப்படுவார். குறிப்பாக ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிக பலன் அளிக்கும் வகையிலான அவரது முயற்சிகள் அடுத்த தலைமுறைக்கும் உத்வேகம், வழிக்காட்டுதலுக்கான ஆதாரங்களாக இருக்கின்றன.
உங்களின் இழப்பையும், அதன் உணர்வையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்போது அவர் உடலளவில் நம்மிடம் இல்லை. ஆனால் அவருடன் நாம் செலவிட்ட இனிய நினைவுகள் மனதில் நீங்காமல் இருக்கும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுகும், அவரை பின்பற்றுவோருக்கும் இந்த இழப்பை தாங்கும் சக்தி கிடைக்கட்டும். ஓம் சாந்தி'' என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் எல் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‛‛ஆன்மிகமும், கருணையும் நிறைந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய இரங்கல் மடலை அடிகளாரின் மனைவியார் லட்சுமி அம்மாளிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து அளித்தோம்.
அம்மா பங்காரு அடிகளாரின் ஆன்மிகப்பணி, கல்விப்பணி, சமூக தொண்டு மற்றும் 2019 ம் ஆண்டு அம்மாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் எழுதிய மடல், பங்காரு அடிகளாரின் மீது பிரதமர் கொண்டிருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications