ஊட்டி அலறுதே.. ரூ.36 கோடி லஞ்சம்? திமுக கவுன்சிலர் பேசிய பேச்சு.. கப்பென பிடித்துக்கொண்ட அண்ணாமலை!
நீலகிரி: லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதை, திமுக நகராட்சி உறுப்பினரே அம்பலப்படுத்தி இருக்கிறார் என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தின்போது, திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ரவிகுமாருக்கும், திமுக கவுன்சிலர் முஸ்தபாவுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகை நகராட்சி சந்தை கடைகள் மாற்றம் பற்றி பேசிய திமுக கவுன்சிலர் முஸ்தபா, ரூபாய் 36 கோடி கமிஷன் வாங்கிட்டியா என திமுக நகராட்சி துணைத் தலைவரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இருவரும் சரமாரியாக ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தனர்.

நகர் மன்ற துணைத் தலைவரும், திமுக கவுன்சிலரும் நீ தான் கமிஷன் வாங்கி இருப்பாய் என ஒருவரை ஒருவர் மாற்றி ஒருமையில் கடுமையாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரையும் மற்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிருந்து, திமுகவை விளாசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு உயர்த்தியிருப்பது குறித்தும், நீலகிரி நகராட்சி, நூறு ஆண்டுகளாக, ஐந்து தலைமுறைகளாக கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் சிறுகுறு வியாபாரிகளை, வெறும் 100 மணி நேரத்தில் கடைகளைக் காலி செய்யச் சொல்லி விரட்டுவது குறித்தும் பேசியிருந்தோம்.

முறையான அவகாசம் கொடுக்காமல், இத்தனை அவசர கதியில் கடைகளைக் காலி செய்து வெளியேறச் சொல்வது குறித்த சந்தேகத்தையும் எழுப்பியிருந்தோம். கடைகளைக் காலி செய்வதில் நகராட்சியின் அவசரம் குறித்த எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார் திமுக நீலகிரி நகராட்சி உறுப்பினர் முஃப்தாபா அவர்கள். நீலகிரி நகராட்சித் துணைத்தலைவர், இந்தக் கடைகளைக் காலி செய்ய 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தரும் தகவலை, நகராட்சி கூட்டத்திலேயே வெளியிட்டிருக்கிறார். லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதை, திமுக நகராட்சி உறுப்பினரே வெளியிட்டிருக்கிறார்.

ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றொரு புறம், ஊழலில் திளைக்கும் திமுக நிர்வாகிகள் என தமிழகத்தை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக. உண்மையான பிரச்சனைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே முயற்சித்து வருகிறதே தவிர, ஆட்சியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications