தொட்டதெல்லாம் துவங்குதா.. பிஸியில் "கமலாலயம்".. மறுபடியும் முதல்ல இருந்தா.. அனலடிக்கும் "அறிவாலயம்"
சென்னை: திமுக அரசுக்கு எதிராக, அடுத்த அதிரடியை பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளதன் மூலம் தன்னுடைய ஆளுமையையும், பவரையும் மீண்டும் நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன்காரணமாக, அதிமுக என்ற பிரம்மாண்ட கட்சியில் நிலவி வந்த உட்கட்சி பூசல் ஓரளவுக்கு, அதுவும் தற்சமயத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதரவாளர்கள்: அதேசமயம், திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி தாங்கள் மட்டுமே என்றும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும் தாங்கள் மட்டுமே என்பதையும் மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ந்து சொல்லி வருகிறார்கள். இதுஒருபக்கம் பாஜகவுக்கு கடுப்பையே தந்து வருகிறதாம். அதிமுக கூட்டணியில் தொடர்வது உறுதியாகிவிட்டபோதிலும்கூட, திமுகவை எதிர்ப்பதில் தாங்கள்தான் வலிமை படைத்தவர்கள் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாம்.
கடந்த ஒரு வருட காலமாகவே, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்ற பிம்பத்தை தமிழக பாஜக தலைவரும் விடாமல் கட்டமைத்தபடியே இருந்தார்.. இதற்காகவே நிறைய போராட்டங்களையும் கையில் எடுத்தார்.. கடந்த வருடத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், அதிமுகவைவிட, தமிழகத்தில் அதிக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் மாநில அரசுக்கு எதிராக செய்தது பாஜகதான் என்பதை மறுக்க முடியாது.. அதிமுகவின் இரட்டை தலைமை விவகார பூசலின் காரணமாகவே, பாஜகவின் இந்த எழுச்சி ஏற்பட்டதையும் மறுக்க முடியாது.
அண்ணாமலை செக்: இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. மறுபக்கம், கர்நாடக தேர்தல் விவகாரத்தில் கவனம் செலுத்துவதில் அண்ணாமலையும் பிஸியாகிவிட்டார்.. இப்போது விஷயம் என்னவென்றால், அண்ணாமலை மீண்டும் தமிழக அரசியலில் பிஸியாகி விட்டார்.. வழக்கம்போல் திமுகவை டார்கெட் செய்யும் பணியையும் துரிதப்படுத்தி உள்ளாராம்..

அதாவது, முதல்வர் ஸ்டாலின் உட்பட, 12 திமுக நிர்வாகிகளின் சொத்துக்கள் பட்டியலை, கடந்த ஏப்ரல் 14ம் தேதி மாநில தலைவர் வெளியிட்டிருந்தார்.. அப்போது, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில், பாதயாத்திரையை, ஜூன் 4ல் துவங்க இருப்பதாக அதிரடியாக அறிவித்தார்.. மேலும், அதில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய, அக்கட்சியின் சார்பில் செயலியும், இணையதளமும் அறிமுகமும் அப்போது செய்யப்பட்டது. அந்த இணையத்தில் பலரும் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்து வருகிறார்கள்..
பாதயாத்திரை: அடுத்த மாதம் இந்த பாதயாத்திரை துவங்குகிறது.. பொது மக்களை அதிகளவில் பங்கேற்க வைப்பது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துமாறு, கட்சியினரை ஏற்கனவே பாஜக மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.. அதன்படியே, இந்த யாத்திரையில் அதிக மக்களை பங்கேற்க வைப்பது, உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளில், தமிழக பாஜகவினர் ஈடுபட போகிறார்களாம்..
கர்நாடகா மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, ஒன்றரை மாதங்களாக, அம்மாநில தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வந்த நிலையில், தேர்தல் நேற்றுடன் முடிந்தது. எனவே, தமிழக அரசியலின் அண்ணாமலையின் கவனம் திரும்பி உள்ளது.. இதில் முதல்வேலையாக, அடுத்த மாதம் துவங்க உள்ள பாதயாத்திரையை கையில் எடுக்க போவதாக தெரிகிறது. அதன்படி, சென்னையில் அடுத்த வாரம், பாஜகவின் மாநில மையகுழு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், யாத்திரை திட்டங்கள் வகுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அதேபோல, ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் பகுதியில், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து பட்டியல் தயாரித்து, மாநில தலைமைக்கு அனுப்ப ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்..

ஹைலைட்: இதைதவிர, இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், விவசாயிகள், வணிகர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.. இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், ஆதாரங்களை திரட்டுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்..
தற்போதுதான் மாநில அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், திமுகவின் அமைச்சர்கள் விவகாரத்தை மீண்டும் தமிழக பாஜக விமர்சிக்க போவதாக தெரிகிறது.. அத்துடன், கவுன்சிலர்கள் + எம்எல்ஏக்கள் மீதான புகார் லிஸ்ட்டும் ரெடியாகி கொண்டிருப்பதால், இதன் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.. ஆக, திமுகவை எதிர்ப்பதில் மீண்டும் வீறுகொண்டு பாஜக மும்முரமாகி வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தரப்பு எப்படி அணுக போகிறது என்ற ஆர்வம் அதிகரித்து கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications