சுனந்தா அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைப்பு
கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் அஸ்தி நேற்று கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான சசிதரூரின் மனைவிசுனந்தா புஷ்கர்(வயது 52). இவர் தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக டுவிட்டரில் குற்றம் சாட்டினார். அதற்கடுத்த சில தினங்களிலேயெ அதாவது கடந்த மாதம் 18- ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலைசெய்யப்பட்டாரா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது அவரது உடல். அதனைத் தொடர்ந்து அவரது அஸ்தி புண்ணிய தீர்த்தங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சுனந்தாவின் அஸ்தி நேற்று கன்னியாகுமரி கடலில் கரைக்கப் பட்டது.

அஞ்சலி நிகழ்ச்சி....
எரியூட்டப்பட்ட சுனந்தாவின் அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த 1-ந் தேதி திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரிக்கு வந்தது...
அதன் பிறகு அந்த அஸ்தியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்க முடிவு செய்தனர் அவரது குடும்பத்தார். இதற்காக அவரது அஸ்தி கலசத்தை திருவனந்தபுரத்தில் இருந்து அவரது கணவர் மத்திய மந்திரி சசிதரூர், மகன் சிவ்மேனன் ஆகியோர் கார் மூலம் நேற்று மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி கொண்டு வந்தனர்.

ஈமகிரியை பூஜைகள்...
பின்னர் அவர்கள் அஸ்தி கலசத்தை எடுத்துக்கொண்டு கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு அவரது அஸ்தி கலசத்தை வைத்து வேதமந்திர ஓதுவார்கள் மூலம் ஈமகிரிகை பூஜைகள் நடத்தப்பட்டன.

கடலில் கலந்தார் சுனந்தா...
பின்னர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அஸ்தி கலசத்தின் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அஸ்தி கலசத்தை, சசிதரூரும், அவரது மகன் சிவ்மேனனும் கையில் எடுத்து சென்று முக்கடல் சங்கமத்தில் கரைத்தனர்.

கட்சி நிர்வாகிகள்...
இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் புரூஸ், நெய்யாற்றின்கரை தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி கவுன்சிலர் தாமஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் அசோக்ராஜ், சிவலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், செல்வ சிவலிங்கம் வட்டார தலைவர்கள் டோன்போஸ்கோ, சேவியர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications