ஜெயலலிதா பூரண நலம் பெற்று வந்து நல்லாட்சி தருவார்.... பிரபல ஜோதிடர்கள் கணிப்பு
சென்னை: தமிழக முதல்வர் பூரணநலம் பெற்று விரைவில் வீடு திரும்புவதோடு ஆரோக்கியத்துடன் மீண்டும் தமிழகத்தினை ஆட்சி செய்வார் என்று பிரபல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12 நாட்களாக அவரது முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டாலும் அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொல்வார்கள். முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்தே தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகள் கோவில் கோவிலாக சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவரது உடல்நிலையில் உள்ள பிரச்சனை மற்றும் அது எப்பொழுது சரியாகும் போன்ற தகவல்கள் சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.

வாட்ஸ் அப் தகவல்
அதிமுக தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதக தகவலில், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில், குருவுக்கு திரிகோணத்தில் ராகு இருக்கிறது. குரு நமது பிராணனை குறிப்பார். ராகு அதை தடுக்கும் செயல்கள் செய்வார். தற்போது எனவே பிறப்பு குருவுக்கு திரிகோணத்தில், கோச்சார ராகு செல்லும் போது இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும் கோச்சார குருவின் பார்வை பிறப்பு சுக்கிரன் மீது இருப்பதால் மருந்துகள் வேலை செய்யும். மேலும் செய்யும் பரிகாரங்கள் பலிக்கும். குரு கல்லீரல் மற்றும் சுவாசத்தை குறிப்பவர், எனவே இந்த உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

ராகு காலத்தில் பரிகாரம்
அமாவாசை நாளில் தொடங்கி பரிகாரமாக ராகுவின் அதிதேவதை தெற்கு திசை பார்த்த காளிக்கு பால் அபிஷேகம் 9 நாட்கள் ராகு காலத்தில் செய்வது நல்ல பலன்களை தரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ராகுகாலத்தில் பாலபிஷேகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஜெயலலிதா ஜாதகம்
முதல்வர் ஜெயலலிதா சிம்மராசி, மகம் நட்சத்திரம், மிதுன லக்னம் என்பது அனைவருக்கும் தெரியும். கேது திசையில் பிறந்த ஜெயலலிதாவிற்கு தற்போது குரு திசை சனி புத்தி நடக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் தசாபுத்தி மாறும் போது விபத்து, உடல்நலக்குறைவு ஏற்படும். பரிகாரங்கள்தான் செய்வதன் மூலம் இந்த சிரமங்களைத் தவிர்க்கலாம். கோடிகணக்காக தொண்டர்கள் செய்யும் பிரார்த்தனைகள் ஜெயலலிதாவைக் காக்கும் என்கின்றனர் தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள்.

சிம்ம ராகு
புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக்கிறார். குரு பெயர்ச்சி சமீபத்தில் நடைபெற்றதால் கன்னியில் குரு இருக்கிறார். இது ஜெயலலிதாவின் சிம்மராசிக்கு 2வது இடம் ஆகும். ஜென்ம ராசியில் இருந்த புதன் இன்று முதல் கன்னி ராசிக்கு மாறுகிறார். இது இரண்டாம் இடமாகும். சிம்மத்தில் தற்போது ராகு அமர்ந்து இருக்கிறார்.

தசாபுத்திகள் நிலை
சனி பகவான் தற்போது ஜெயலலிதாவின் ஜாதகத்தில் 4ம் இடத்தில் இருக்கிறார். இப்போது குரு திசையில் சனிபுத்தி நடப்பதால்அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தற்போது 5ம்இடத்திலும் அமர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தைரியஸ்தானங்கள் வலுவாக உள்ளது. அவர் உடல்நலக்கோளாறுகளை ஜெயித்து விரைவில் மீண்டு வந்து நல்லாட்சி தருவார் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சனிபகவான் நிலை
ஜெயலலிதாவின் ராசியில் தற்போது சனிபகவான் ராசிக்கு 4ம் இடமான விருச்சிகத்தில் உள்ளதால் தற்போது தேக ஆரோக்கிய குறைபாடு உள்ளது. சனிபகவான் உடல் பாதிப்பையும் ஏற்படுத்தினாலும் நல்லதையே செய்வார் என்கின்றனர் ஜோதிடர்கள். டிசம்பர் 5 ம் தேதி 2016க்குப் பின்னர் அவர் உடல் உபாதைகள் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் நாடாள்வார் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஜோதிடர் என்ன சொல்கிறார்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தாதிச்சி என்ற ஜோதிடர் சென்னை வந்துள்ளார். அவரது இயற்பெயர் மைக்கேல் டோத். தமிழக முதல்வர் ஜெயலலிதாவில் ஜாதகம் பற்றி ஆங்கில நாளிதல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் இருந்து உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன. அவருக்கு இப்போது சனி புத்தி நடக்கிறது. அவரது ஜாதகப்படி 6ம் இடத்துக்குரிய சனி தற்போது விருச்சிகத்தில் சஞ்சீவிக்கிறார். குரு தற்போது பாதகாதிபதியாக உள்ளார். இதனால் தான் அவருக்கு ஜாதகப்பிரகாரம் தற்போதைய உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

மீண்டு எழுவார்
2017ல் ராகு இடம் பெயருகிறார்.அதன் பிறகு பிப்ரவரி மாதத்தில் இருந்து லக்னாபதி நன்மைகளை அள்ளித் தருவார். தற்போது சிகிச்சை அளித்தும்வரும் இளம் டாக்டர் ஒருவரின் முயற்சியால் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில்இருந்து ஜெயலலிதா நிச்சயம் விடுபட்டு மீண்டு எழுவார். இதன்பிறகு 2 ஆண்டுகளுக்கு அவர் எந்த பிரச்னையும் இன்றி சிறப்பாக நிர்வாகம் நடத்துவார். ஜெயலலிதா ஜாதகம் உண்மையிலேயே ஒரு அருமையான யோக ஜாதகம். அவர் தன்னலமற்ற தலைவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அது நிச்சயம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் அவருக்கு வாக்களித்த தமிழக மக்களின் பிராத்தனையாக உள்ளது.












Click it and Unblock the Notifications