மேல்மருவத்தூரின் அன்னப்போஸ்ட் தலைவர்.. பங்காரு அடிகளாருக்கு தூணாக துணை நின்ற லட்சுமி அம்மாள்!
செங்கல்பட்டு: மறைந்த பங்காரு அடிகளாருக்கு பக்கத் துணையாக இருந்து, ஆன்மீகப் பணிகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் உதவி புரிந்தவர் லட்சுமி அம்மாள்.
பங்காரு அடிகளார், ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்திரமேரூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமியை கடந்த 1968ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பல பேரக் குழந்தைகள் உள்ளனர். பங்காரு அடிகளாரின் ஆன்மீக மற்றும் சமுதாயப் பணிகளுக்கு ஆரம்பம் முதலே பக்க பலமாக விளங்கியவர் லட்சுமி அம்மாள்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். காசி கோயில்களில் மட்டுமே பெண்கள் கருவறைக்குள் சென்று அபிஷேக, ஆராதனைகள் செய்வார்கள். மற்ற பகுதிகளில் எங்கும் கோவில் கருவறைகளுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அமைதியாக ஒரு ஆன்மீகப் புரட்சியையே தமிழ் மண்ணில் நிகழ்த்திக் காட்டியவர் 'அம்மா' என பக்தர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது மட்டுமின்றி, அவர்களையே அபிஷேகங்கள், பூஜைகள் செய்யவும் அனுமதிக்கிறது. மேலும், பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும் இந்தக் கோயிலுக்குள் சர்வ சுதந்திரத்துடன் வரலாம் என்பதே ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சிறப்பு.
ஆன்மீகத்தில் பெண்ணுரிமையை நிலைநாட்டிய பங்காரு அடிகளார், 1982ஆம் ஆண்டிலேயே மகளிர் ஆன்மீக மாநாட்டை நடத்தியவர். அதன் பிறகு சென்னையிலும், மதுரையிலும் மகளிர் ஆன்மீக மாநாட்டை நடத்தினார். மிகச் சிறப்பாக குடும்ப வாழ்க்கையையும் நிர்வகித்து வந்த பங்காரு அடிகளார் இல்லற ஞானி என்றும் அவரது பக்தர்களால் போற்றப்படுகிறார்.
மேல்மருவத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும், உதவிகளையும் ஒரு தனி அரசாங்கம் போலவே இருந்து செயல்படுத்தியவர் பங்காரு அடிகளார். அப்பகுதி மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த பங்காரு அடிகளார், உள்ளாட்சி அமைப்பின் மூலமும் ஏராளமான உதவிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.
பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாள், மேல்மருவத்தூரின் ஊராட்சி மன்றத் தலைவியாக தற்போதும் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வானார்.

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆதிபராசக்தி சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாளின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர் ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட முன்வராத நிலையில், மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த அவரது மகன் செந்தில்குமார் தனது மனவை வாபஸ் பெற்றார். இதனால் லட்சுமி பங்காரு அம்மாள் போட்டியின்றி தேர்வானார்.
லட்சுமி அம்மாள், ஏற்கனவே 1996 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இரு முறை மேல்மருவத்தூரின் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டவர். அதன்பிறகு சுழற்சி முறையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேல்மருவத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் லட்சுமி அம்மாள் போட்டியிட முடியாத சூழல் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த ஊராட்சி பொதுவாக மாறியதால் லட்சுமி அம்மாள், போட்டியிட மனு தாக்கல் செய்து, அன் அப்போஸ்டாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications