அன்பார்ந்த பயணிகள் கவனத்திற்கு... 40 வருடமாக ஓடி வந்த பீச்- மவுன்ட் ரயில் ரத்து!
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கும் இடையிலான மின்சார ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.
கடந்த 40 வருடமாக செயல்பட்டு வந்த சேவை இது. திடீரென இது ரத்து செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் தெரியவில்லை. சிறப்பு சேவையாக இது செயல்பட்டு வந்த நிலையில் பலரும் இந்த ரயிலால் பலனடைந்து வந்தனர்.
தற்போது இந்த ரயில் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் குறிப்பாக பரங்கிமலை ரயில் நிலையத்தையொட்டி உள்ள அனைத்துப் பகுதி மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சென்னையின் உயிர் நாடி
சென்னை போக்குவரத்துக்கு உயிர் நாடியாக இருப்பது மின்சார ரயில் சேவைதான். ரயில் சேவை இருப்பதால்தான் சென்னை நகர மக்கள் போக்குவரத்து நெரிசலிலிருந்து ஓரளவு தப்பி பல கிலோமீட்டர் தூரத்திற்கு நிம்மதியாக சென்று வர முடிகிறது.

சென்னை டூ செங்கல்பட்டு டூ அரக்கோணம் டூ திருத்தணி
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு நாள் தோறும் 250 க்கும் மேற்பட்ட ரயில் சேவை செயல்பட்டு வருகிறது

ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு வசதி
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என பலதரப்பட்ட பயணிகள் மின்சார ரயிலால் பயனடைந்து வருகின்றனர்.

எத்தனை விட்டாலும் பத்தாது பாஸ்
எத்தனை ரயில்கள் விட்டாலும் கூட மக்களுக்குப் போதுமானதாக அவை இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் அத்தனை ரயில்களிலும் கூட்டம் கட்டி ஏறுவதைப் பார்க்கலாம்.

ஒரே ஒரு சிறப்பு சேவை
இந்த நிலையில் கடந்த 40 வருடமாக சென்னை பீச் முதல் பரங்கிமலை வரை ஒரே ஒரு சிறப்பு ரயில்வே சேவை செயல்பட்டு வந்தது. கடற்கரையில் இருந்து காலை 8.32 மணிக்கு புறப்பட்டு பரங்கிமலைக்கு 8.58 மணிக்கு சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கடற்கரை நிலையத்திற்கு 9.40 மணிக்கு வந்து சேருகிறது.

திடீரென நிறுத்தம்
சென்னையில் வேறு எங்கும் இப்படி சிறப்பு ரயில் சேவை இல்லை. இந்த நிலையில் இந்த ரயில் சேவையை திடீரென நிறுத்தி விட்டனர். ஏன் என்று தெரியவில்லை. தொழில்நுட்பக் காரணம் என்கிறார்கள். இந்த ரயில் சேவையால் பயனடைந்து வந்த மக்கள் அதிருப்தியில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications