அடுத்த வாரம் எங்க மாமா வர்றாரு! பாதி சம்பளம்..அரிசி கூட போதும்! வயிலில் இறங்கிய வட மாநில தொழிலாளிகள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் நிலையில் தற்போது நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தால் உள்ளூர் தொழிலாளிகள் கிடைக்காததால், ஆட்கள் பற்றாக்குறையால் மேற்கு வங்க தொழிலாளர்களை வரவழைத்து விவசாய பணிகளில் ஈடுபடுத்தி உள்ளனர் விவசாயிகள். கொளுத்தும் வெயிலில் வங்க பாடல்களை பாடியபடி அவர்கள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏக்கருக்கு பாதிக்கு பாதி கூலி, அரிசி கொடுத்தால் கூட போதும் என்கிறார்கள் விவசாயிகள்.
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியால் விவசாயிகளுக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. காலை 10 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வேலை பார்த்தாலே 350 ரூபாய் ஊதியம் கிடைக்கும் நிலையில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க அதிக ஊதியம், குறைந்த நேர வேலை என தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பிரச்சினை செய்வதாக ஒரு புறம் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு வேலைகளில் வட மாநில தொழிலாளர்கள் களமிறங்கி வருகின்றனர்.
கட்டுமானம், டெக்ஸ்டைல், உணவுத்துறை, தொழிற்சாலை என கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் உத்தர பிரதேசம். பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு வந்து வேலை பார்த்து வருகின்றனர். நீண்ட நேர வேலை குறைந்த ஊதியம் கொடுத்தாலே போதும் என்பதால் அவர்களை தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்களும், கடை முதலாளிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயம் பிரதானமாக இருக்கும் டெல்டா பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

குறிப்பாக மயிலாடுதுறை குத்தாலம், நலத்துக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக அளவில் பெண்கள் சென்று விடுவதால் நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே வந்தாலும் ஏக்கருக்கு 8000 ரூபாய் வரை கேட்கிறார்களாம். ஆனால் நடவு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் 4,500 வரை மட்டுமே ஏக்கருக்கு கேட்கிறார்கள்.
மேலும் தங்குவதற்கு தனியாக இடம் கேட்பதில்லை. உணவுக்கு வெறும் அரிசியை கொடுத்தால் கூட போதும் என்பதால் ஏக்கருக்கு 4500 வரை மிச்சமாகிறது என்கிறார்கள் விவசாய நில உரிமையாளர்கள். நம்ம ஊரில் படங்களில் வருவது போல கொளுத்தும் வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க பெங்காலி பாடல்களை பாடியபடி தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும் போது," மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது. தற்போது அங்கு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நம்மூர் ஆட்கள் 8500 வரை கேட்கிறார்கள். ஆனால் மேற்கு வங்க தொழிலாளர்கள் ஏக்கருக்கு 4000 ரூபாய் கொடுத்தாலே போதும் என்கின்றனர்.
மேலும் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு அரிசி வாங்கி கொடுத்தால் போதும் இடையில் டீ வடை வாங்கி கொடுத்தாலும் போதும் என்கிறார்கள். தங்குவதற்கும் பெரிய அளவில் இடம் கேட்பதில்லை விவசாய நிலத்திற்கு அருகிலேயே கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். எவ்வித பிரச்சனையும் தராமல் வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். 100 நாள் வேலையால் உள்ளூர் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் தான் வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம். ஆனாலும் பாதிக்கு பாதி தான் செலவாகிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications