பாஜகவும் ஊழல் கட்சிதான்... ரஜினி யோசித்து முடிவெடுக்கவேண்டும்: ராமகிருஷ்ணன்
சென்னை: பாஜக தலைவர்களும் பல ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளனர், எனவே பாஜகவில் சேருவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் யோசிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 38 நாட்களை கடந்துள்ளது. அவர்களை ஆதரித்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
இப்பிரச்சினை என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை என்று மாநில அரசும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.
அப்படியானால் எதற்காக மத்திய அரசிலும் மாநில அரசிலும் தொழிலாளர் துறை அமைச்சர்கள் உள்ளனர். இது தொழிலாளர் பிரச்சினை தானே, எனவே மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் ஊழல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க. தலைவரின் மகள், முன்னாள் மத்திய மந்திரி ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளனர்.

ஊழல் ஒழிப்பு இயக்கம்
இந்த சூழ்நிலையில் மாநிலம் தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்துவது அவசியமாக உள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையையும் சந்தித்து பேசி இருவரும் கூட்டாக இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

லோக் ஆயுக்தா
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. அதேபோல் தமிழகத்திலும் லோக் ஆயுக்தா சட்டத்தை மாநில அரசு கொண்டு வரவேண்டும்.

சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரணை
கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாஜகவிலும் ஊழல்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது, ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் தண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை பாஜக பயன்படுத்த முடியும் என்றால், அது ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல.

ரஜினிகாந்த் யோசிப்பாரா?
அரசியலுக்கு வருவதும், தனிக்கட்சி தொடங்குவதும் நடிகர் ரஜினிகாந்தின் உரிமை. இந்தியாவில் உள்ள பாஜக தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளனர், பாஜக ஊழல் மலிந்த கட்சி, எனவே இந்த கட்சியில் சேருவதன் மூலம் ஊழலை எதிர்த்து எந்த அளவுக்கு போராட முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் தான் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications