மோசடி வழக்கு- தீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்தது கோர்ட்!
சென்னை: குஜராத் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டுக்கு மோசடி வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் வன்முறைகள் நிகழ்ந்த போது குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி எஹ்சான் ஜாப்ரி உட்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர்
குல்பர்க் படுகொலையைத் தொடர்ந்து அங்கு வீடுகள் கட்டித்தரவும், பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி செய்யவும் குல்பர்க் பகுதியை காட்சியகமாக மாற்றவும் ரூ1.51 கோடி நிதியை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து தீஸ்டா பெற்றதாகவும் அதை பாதிக்கப்பட்ட தங்களுக்காக தீஸ்டா செலவு செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்றும் குடியிருப்புவாசிகள் புகார் கொடுத்திருப்பதாக குஜராத் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி தீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனுவில் தம் மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய்யான வழக்கு என்றும் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இப்படி தம் மீது போடப்படும் 5வது பொய் வழக்கு என்றும் தீஸ்டா சுட்டிக் காட்டியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், தீஸ்டா செதல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் ஆகியோருக்கு 3 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications