நீலாங்கரை இன்ஸ்பெக்டர் என்னை சுடப்போவதாக கூறியே சுட்டார்: தமீம் அன்சாரி
சென்னை: நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் சுடப்போவதாக கூறியே என்னை சுட்டார் என சிறுவன் தமீம் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்னை நீலாங்கரை ஜெ-8 காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜின் துப்பாக்கி வெடித்ததில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தமீம் அன்சாரி என்ற 16 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து, நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது மகனுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கு உத்தர விடக் கோரி சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சபீனா பேகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரிவான அறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 28ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு 13ம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது: இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவனுக்கு குளோபல் மருத்துவமனையில் 31 நாள்கள் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சிறுவன் நலமாக இருப்பதாகவும், அவனை மருத்துமனையிலிருந்து விடுவிக்கலாம் எனவும் டாக்டர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். டாக்டர்கள் தெளிவான அறிக்கை வழங்கிய பிறகும், சிறுவனை மருத்துவமனையிலிருந்து விடுவிப்பதை தடுத்து நிறுத்த முடியாது.
மேலும், சிறுவனை விடுவிப்பதற்கு முன்பு மருத்துவமனையின் அனைத்து செலவுகளையும் அரசு செலுத்த வேண்டும். இது தவிர, சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வழங்கப்பட்டதாக போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதனால், மருத்துவமனையின் கட்டணங்களை போலீஸார் செலுத்திய பிறகு சிறுவனை விடுவிக்கலாம். மேலும், அந்த சிறுவன் வெளிநோயாளியாக சிகிச்சை பெற வேண்டுமானால் அவரது சொந்த செலவில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, இந்த கூடுதல் மனு முடித்து வைக்கப்படுகிறது. தவிர, பிரதான ஆட்கொணர்வு மனுவுக்கு மார்ச் 4-ஆம் தேதிக்கு முன்பு போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன தமீம் அன்சாரி, சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது: ''நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் என்னை சுடப்போவதாக கூறித்தான் சுட்டார். ஆனால், கவனக்குறைவாக சுட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மார்க்ஸ், ''காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காயமடைந்த சிறுவன் தமீம் அன்சாரிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications