For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயில்களை இடித்துவிட்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது: ஆர்.எஸ்.எஸ். கிளப்பும் புது சர்ச்சை

கோயில்களை இடித்துவிட்டுதான் ஆங்கிலேயர்கள் சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தை எழுப்பினர் என ஆர்.எஸ்.எஸ். புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சிவா, விஷ்ணு கோயில்களை இடித்துவிட்டுதான் ஆங்கிலேயர்களால் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 'விஜயபாரதம்' ஏடானது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயபாரதம் (அக்டோபர் 3-17) ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை விவரம்:

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் என்று ஒரு கோயில். இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி அளித்து கட்டச் செய்தது என்று 'வரலாறு' எழுதுகிறார்கள். உண்மை நேர்மாறானது.

ஏதோ ஒரு கோயில் எங்கோ கட்டப்பட்டது என்பதல்ல விஷயம். இன்று தமிழகம் முழுவதற்கும் நீதி வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ள இடம் 1757க்கு முன்னால் சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் என்ற சிவா-விஷ்ணு ஆலயம் இருந்த இடம். இந்த அக்கிரமம் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 150வது ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது அம்பலமானது.

British demolished hindu temples and built Madras High court, says RSS

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 'ஆஹா நமது நீதிமன்றம் ஒரு புனிதமான இடத்தில் அமைந்திருக்கிறது' என்று கொண்டாடியதைப் பார்க்கவேண்டுமே! 'புனிதமான இடத்தில்' என்றால் கோயில் இருந்த இடம் என்றுதான் பொருள். அது மட்டுமா, சென்னை மாநகருக்கே அந்தப் பெயர் வருவதற்கு சென்ன கேசவ பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் இரட்டை ஆலயங்கள்தான் காரணமாக இருந்திருக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிப்பதற்காக இந்த இரட்டைக் கோயில்களை தகர்க்கப் போவதாக அறிவித்தது. அன்றைய பக்தர்கள், ஹிந்து பெருமக்கள் புயலாய் சீறினார்கள். இதையடுத்து வேறு இடத்தில் கோயில் கட்ட பணமும் இடமும் தருவதாக கிழக்கிந்திய கம்பெனி சொல்லிப் பார்த்தது.

அன்றைய ஹிந்துக்களின் ஆவேசமான தலைவராக உருவானவர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார். இவர் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். கோயில் இடிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு தன்னுடைய சொந்த செலவில் சென்னகேசவப் பெருமாளையும் சென்னமல்லீஸ்வரரையும் தேவராஜ முதலித் தெருவில் 1700ல் பிரதிஷ்டை செய்தார். விஷயம் என்னவென்றால் அதற்குள் வெள்ளையன் அந்த இரண்டு கோயில்களையும் இடித்துத் தள்ளியிருந்தான். மானமுள்ள மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் வெள்ளையன் தருவதாகச் சொன்ன பணத்தை நிராகரித்தார். தன் சொந்த செலவில் கோயில் கட்டிமுடித்தார். குறிப்பாக சென்னமல்லீஸ்வரர் கோயிலை ஆலங்காத்தா பிள்ளை என்ற வணிகர் கட்டிக்கொடுத்தார்.

British demolished hindu temples and built Madras High court, says RSS

ஆதியில் இந்த இரு கோயில்களும் 1646லேயே கட்டப்பட்டவை என்கிறார் சென்னை பற்றி வரலாற்று குறிப்புகள் தரும் எஸ். முத்தையா. அந்த இரண்டு கோயில்களையுமே பேரி திம்மப்பா என்ற மொழிபெயர்ப்பாளர் கட்டியிருந்தார். யார் கட்டினால் என்ன? இன்று சென்னை உயர்நீதிமன்றம் உட்கார்ந்துகொண்டிருக்கிற இடத்தில் (அல்லது வெள்ளையனால் திணிக்கப்பட்ட இடத்தில்) ஆதி காலம் போல அந்த கோயில்கள் இரண்டும் இல்லை. ஆனால் கோயிலுக்கான சில அறிகுறிகள் இன்னமும் பளிச்சென்று தெரிகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சிஐஎஸ்எஃப் படை சென்னை உயர்நீதிமன்றத்தை பாதுகாவல் செய்து வருகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ள இடம் அது. அப்படியிருக்க நான்கு திசைகளிலும் வாசல்களைக் கொண்ட (எந்த ஒரு ஹிந்து கோயிலிலும் இருக்கும் கோபுர வாசல்கள் போல) உயர்நீதிமன்ற வளாகத்தை மத்திய படை காவல் செய்யவேண்டியிருக்கிறது.

எதனால்? கடந்த ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வழக்கறிஞர்கள் 6,400 பேர் குற்றவழக்குகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. அந்த அளவுக்கு உச்ச நீதிமன்ற வளாகத்தில் சட்டம் ஒழுங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறது. யாராவது பக்தர்கள் கூறலாம்: 'கோயிலை இடித்தாய் அல்லவா, அந்த பாவம் நீதிமன்றத்தை வளைத்துப் பிடித்திருக்கிறது' என்று.

சாதாரண பாவமா அது? மகா பாவம். கோயில் இருந்த காலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் கோயிலிலிருந்து அர்ச்சகர்கள் கொண்டுவரும் துளசி தீர்த்தத்தை வார்த்து 'நான் சொல்லும் சாட்சி உண்மை. பொய் அல்ல' என்று சபதம் ஏற்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள் சிலரும் 'நான் தொடுத்திருப்பது உண்மையான வழக்கு. பொய் வழக்கு அல்ல' என்று சபதம் ஏற்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாதாரண மக்களின் மன நிலை எப்படி இருந்தது, இப்போது எந்த அளவுக்கு அந்த இடம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லாமலே புரிகிறது.

ஏதோ புனித ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிக்க கோயிலை இடித்தார்கள் என்பது மட்டும் அல்ல சூழ்ச்சி. 1844ல் வெள்ளையன் ஒரு சட்டம் இயற்றினான். அதன்படி கிறிஸ்தவராக மதமாற்றப்பட்டவர் சொத்துக்கு வாரிசாக தொடர்ந்து இருக்க முடியும். ஏறக்குறைய அதே சமயத்தில் கிறிஸ்தவ இறை இயலை (தியாலஜி) சென்னை பல்கலைக்கழகத்தில் கட்டாயப் பாடம் ஆக்கினான். பிரபல அவுரி வர்த்தகரான கஜுலு லட்சுமிநரசு செட்டி இந்த மதமாற்ற சட்டத்தை எதிர்த்து 1846ல் சென்னை நகரில் கண்டன கூட்டம் நடத்தினார். இதையடுத்து அந்த வக்கிரமான சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஏதோ ஒரு லட்சுமிநரசு செட்டி மதமாற்ற சட்டத்தை எதிர்த்தார் என்பதல்ல. 1888ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு மாணவர் மதமாற்றப்பட்டார். அது மாநிலமெங்கும் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியது. கிளர்ச்சியாளர்கள் மிஷனரி பள்ளிகளிலிருந்து பிள்ளைகளை நீக்கி சொந்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் துவக்கினார்கள். இந்த நல்ல பணியில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள்தான் அந்த நாளைய காங்கிரஸின் ஸ்தாபகர்களாக விளங்கினார்கள்.

நடப்பது 2017. இதெல்லாம் நடந்து 360 ஆண்டுகள் ஆகிவிட்டனவே; இப்போது போய் ஹிந்து கோயிலை இடித்தார்கள், ஹிந்துக்களை மதமாற்ற சட்டம் இயற்றினார்கள் என்று பேசுகிறீர்களே என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. 600 ஆண்டுகளுக்கு முன்னால் பாபர் ராமர் கோயிலை இடித்ததை ஹிந்துக்கள் இன்றளவும் மன்னிக்கத் தயாராய் இல்லை.

சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 150வது ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போன்ற பிரமுகர்கள் அமர்ந்திருக்க, கோயில் இடிக்கப்பட்டு அங்குதான் இன்றைய உயர்நீதிமன்ற கட்டிடம் எழுப்பப்பட்டது என்று ஐந்தே மாதங்களுக்கு முன்புதான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள இந்திரா முகர்ஜிக்கு தெரிந்தபோது, அவரால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. 'நீதிமன்றம் மிகப் புனிதமான இடத்தில் அமைந்திருக்கிறது' என்று தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார். அப்போதுதான் நாடு பிடிக்கும் வெள்ளையனின் இந்தக் கொடூரம் எல்லோர் பார்வைக்கும் வந்தது. டூ

வந்தேறி வியாபாரி கோயிலை இடிப்பானாம், வாய் திறவாமல் அநீதியை நாம் சகிக்கணுமாம்!

'முகலாயர் காலத்தில் தான் கொடூரம் நடந்திருக்கிறது, ஹிந்து கோயில் இடிப்பு, கொலை, கற்பழிப்பு என்று கோரதாண்டவம் நடந்தது. ஆனால் கிறிஸ்தவ ஆதிக்க காலம் அப்படியல்ல. அவர்கள் வழி அன்பு வழி' என்று ஏமாளித்தனமாக வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களின் கண்களை திறக்கிறது, சென்ன சேகவர், சென்னை மல்லீஸ்வரர் கோயிலை இடித்து கிழக்கிந்தியக் கம்பெனி உயர்நீதிமன்றம் கட்டிய அக்கிரமச் செயல். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

தொடர்கிறது ஹிந்துக்களுக்கு அநீதி

வெள்ளையன் தகர்த்த சிவா-விஷ்ணு ஆலயம் ஹிந்து பக்தர்களின் ஒற்றுமையை சமூக நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டது. அதைத் தகர்த்து ஹிந்துக்களை சிதறடித்து மதமாற்றும் சதி அந்த கோயில் இடிப்பின் உள்நோக்கமாக இருந்தது.

சென்னை மாநகருக்கே அந்தப் பெயரை தந்துள்ள சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் இருவரும் வரலாற்று புரட்டுகளை தகர்த்து, மறுபடியும் பெருமிதமான நடுநாயகமான இடம் பெறவேண்டும் என்பது பக்தர்களின் ஆசை.

இடித்த கோயிலை கட்ட வெள்ளையன் பணம் தந்தபோது அதை நிராகரித்த சென்னை ஹிந்துக்கள் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

கோயில் இடத்தில்தான் கோர்ட் வந்திருக்கிறது என்பதற்கு வேறு உதாரணமே தேவையில்லை. மத்திய படையைக் கொண்டு பாதுகாவல் செய்யவேண்டிய நிலைமை உள்ள இடத்தில் நான்கு திசைகளில் வாசலைக் கொண்ட உயர்நீதிமன்றம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

நல்ல நீதிபதி, நல்ல பக்தர்

நல்ல நீதிபதியாக திகழ்ந்த டி. முத்துசாமி ஐயர் நல்ல பக்தராகவும் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரியும். எனவே, தனது பணிக்காலம் முழுதும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர் காலணி அணிந்து செல்வது இல்லை. கோயிலுக்குள் யாராவது காலணி அணிந்து செல்வார்களா என்ன, என்பது அவரது கருத்து.

இவ்வாறு விஜயபாரதம் ஏட்டில் எழுதப்பட்டுள்ளது.

English summary
RSS magazine Vijaya Bharatham's article said that British People demolished the two hindu temples and built the Madras High court. This article created new controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X