மேட்டூர் அணை நீர் காவிரி டெல்டாவுக்குதான்..வீணாகும் நீரை வறட்சி ஏரிகளுக்கு கொண்டு செல்ல எதிர்ப்பாம்!
மன்னார்குடி: மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா பாசனத்துக்குதான் பயன்படுத்த வேண்டும்; வறட்சியான ஏரிகளுக்கு உபரி நீரை கொண்டு செல்லும் 'சரபங்கா' நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தவே கூடாது; அத்திட்டத்தையே கைவிட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன்.
மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் சரபங்கா நீரேற்றும் திட்டம் தொடங்கப்பட்டது. மேட்டூர் அணையின் உபரி நீரை வறட்சி ஏரிகளுக்கு கொண்டு செல்வதாக கூறி இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா பாலைவனமாக்கப்படும். இந்த உள்நோக்கத்துடனேயே சரபங்கா திட்டம் கொண்டுவரப்பட்டது.

சரபங்கா திட்டத்தின் மேச்சேரி, நங்கவள்ளி குழாய் வழி பாதைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. காவிரி மேலாண்மையத்தின் அனுமதி பெறாமல், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக சரபங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தாமதப்படுத்துகிறது.
சரபங்கா திட்டத்தின் முதல் கட்டப் பணி ரூ562 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துவிட்டது. 2-வது கட்டப் பணிக்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ1,000 கோடி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சரபங்கா திட்டத்துக்கு முன்னர் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆதரிக்கிறது. அரசாணை வெளியிடுகிறது. திமுக அரசு சட்டவிரோதமாக சரபங்கா திட்டத்தை செயல்படுத்த முனைகிறது.
சரபங்கா திட்டம் முழுமையடைந்துவிட்டால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவையே சந்திக்க நேரிடும். மேட்டூர் அணை நிரம்புகிற போது சரபங்கா உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராட்சத இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றுவதுதான் இத்திட்டம். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும். இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications