என் குழந்தையோட காலே போச்சு, என் காக்கிச்சட்டையே வேண்டாம்.. கதறி அழுத காவலர்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே சாப்பிட்ட என் மகளுக்கு வலது கால், இடது கை செயல் இழந்துவிட்டன. தவறான சிகிச்சையால்தான், என் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று கூறி காவலர் ஒருவர் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணி வயது 42. இவர் ஆவடி காவலர் குடியிருப்பில் பணியாற்றுகிறார். இவரது மகள் பிரதிஷா (10). இவருக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரதிஷாவுக்கு மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை அவரது பெற்றோர் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்ஷாவின் வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்,பிரதிக்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோர் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவலர் கோதண்டராமன், தனது குழந்தைக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால், யாரும் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் தனது மகளுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடமும், சுகாதாரத் துறையினரிடமும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த கோதண்டராமன் தலைமைச் செயலகத்துக்கு தனது மகள் பிரதிஷாவுடன் நேற்று வந்துள்ளார். திடீரென ராஜாஜி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் கோதண்டராமனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.

பின்னர் கோதண்டராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே எனது மகளுக்கு வழங்கினோம். என் மகள் 5 ஆண்டுகளாக மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தார். அதனால் தற்போது எனது மகளின் வலது கால், இடது கை செயல் இழந்துவிட்டன. தவறான சிகிச்சையால்தான், என் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். என் குழந்தையோட காலே போச்சு, என் காக்கிச்சட்டையே வேண்டாம். என் பொண்னோட காலுக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கதறி அழுதபடி போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் அந்த காவலருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications