கொத்துக் கொத்தாக பிடிக்கப்படும் தெரு நாய்கள்.. சென்னை மாநகராட்சி சொன்ன நல்ல செய்தி
சென்னை: கடந்த 10 நாட்களில் மட்டும் 407 தெரு நாய்களுக்கு நாய் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் தான் நாய்களின் முதல் இலக்காக இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை ஆக்ரோசத்துடன் தெருநாய்கள் அவர்களை விபத்திற்கு உள்ளாக்கிவிடுகின்றன. இல்லாவிட்டால் கடித்து வைத்து விடுகின்றன. இது அடிக்கடி நடக்கிறது.
நாய்கள் ஒருபுறம் எனில் மாடுகள் மறுபுறம் விபத்தை ஏற்படுத்துகின்றன.மாடுகள் வளர்க்கும் சிலர், தெருக்களில் மாடுகளை மேயவிடுகிறார்கள். மாடுகளாலும் மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் விபத்துக்கள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது . தெரு நாய்கள் மற்றும் மாடுகள் பிரச்சனையை குறிப்பிட்டு நாள்தோறும் சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் செல்கின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் தெருநாய்கள் கொல்லப்படுவது இல்லை. மாறாக நாய்கள் பிடித்துச் செல்லப்பபட்டு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். பின்னர் அவை சுதந்திரமாக அதே பகுதிகளில் விடப்படும். இதுதான் நடக்கிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மட்டும் 90 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது. இதுவரை இந்த மாதத்தில் 551 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் 78 தெருநாய்களுக்கு நாய் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை இந்த மாதத்தில் 407 தெரு நாய்களுக்கு நாய் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் வெளியிட்டுள்ள பதிவில், பெசன்ட் நகர் மற்றும் வால்மீகி நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதியை தயவு செய்து பாருங்கள், அங்கு 100க்கணக்கான தெருநாய்கள் சுற்றுகின்றன. அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தில்லி என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், ஐயா, எங்கள் பகுதியிலும் பெரும் அளவில் தெரு நாய்கள் தொல்லை இருக்கிறது. நேற்று அதிகாலை இறகுபந்து விளையாட சென்ற என் 11 வயது மகனை 4-5 நாய்கள்எங்கள் கண் முன் துரத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுத்தியது. இடம்: சுபாஷ் சந்திர போஸ் தெரு, ஜீவானந்தம் தெரு,பெரம்பூர். என்று கூறியுள்ளார்.
லக்கிலுக் என்ற ட்விட் பதவில், சார், மடிப்பாக்கத்துலேயும் (187வது வார்டு) கொஞ்சம் புடிச்சீங்கன்னா புண்ணியமா போவும். நாய்கள் மட்டுமில்லே. மாடுகளும் தெருவில் அராஜகம் செய்கின்றன. சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. ஏதாவது பெருசா சம்பவம் நடந்தாதான் நடவடிக்கை எடுப்பீங்க போல என்று வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications