இலவச பஸ் ஏறி உறவினர்களை காண மகிழ்ச்சியுடன் பயணித்த சென்னைவாசிகள்
சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வீட்டிற்குள் முடங்கிய மக்கள் பலரும் இன்று வெள்ளம் வடிந்த உடன் அரசு அறிவித்த இலவச பேருந்தில் ஏறி உறவினர்களைக் காணச்சென்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமை முதல் 8ம்தேதி வரை சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் இலவசமாகவே இயக்கப்படும் என்று தமிழக் அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் கை கொடுத்து உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எந்த வித கட்டணமின்றி மாறி, மாறி பேருந்துகளில் பயணம் செய்து தங்கள் இடங்களை பொது மக்கள் அடைந்தனர்.

மழையால் பாதிப்பு
சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. சாலைகள் குளங்களாக மாறின. ரயில் தண்டவாளங்களிலும் வெள்ளம் ஓட்டியதால் ரயிலுக்கு பதிலாக படகு போக்குவரத்து நடைபெற்றது.

தவித்த மக்கள்
இதனால் வேலைக்கு செல்பவர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே செல்பவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளானார்கள். கால்டாக்ஸிகள், ஷேர் ஆட்டோக்கள் டீசல் இன்றி நிறுத்தப்பட்டு விட, மக்கள் செய்வதறியாது தவித்து போயினர்.

கையில் பணமில்லை
வங்கிகளில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் எடுக்க முடியாமல் மக்கள் பரிதவித்தனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தது. இதனையடுத்து, இலவச பஸ் பயண அறிவிப்பால் காலை முதலே சென்னை கோயம்பேடு, பாரிமுனை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.

கார்களில் இருந்து பஸ்
கார், இருசக்கர வாகனங்களில் பயணித்த மக்கள் பலரும் மழையில் வாகனங்கள் சேதமடைந்திருக்க, இன்று பேருந்துகளில் இலவச பயணம் செய்தனர். யாரும் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. மாநகர பேருந்துகளில் மக்கள் மகிழ்ச்சியாக பயணத்தை மேற்கொண்டதை காண முடிந்தது.

குடையோடு பயணம்
மழை விட்டுவிட்டது என்று நம்பி ஆனாலும் குடையோடு பேருந்து நிலையம் போனவர்களை நனைத்தது மழை. நனைந்து கொண்டே பேருந்தில் பயணித்து உறவினர்களை காணச் செல்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் சிலர். இன்னும் 3 நாட்களுக்கு இந்த இலவச பயணத்தை அனுபவிக்கலாம் சென்னைவாசிகள்.












Click it and Unblock the Notifications