முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மருமகன் மர்ம மரணம்! பெண் கைது!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ் (வயது 51). இவரது மனைவி முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில்ரோசி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கொளத்தூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி கல்பனா. காமராஜும், கோவிந்தனும் நண்பர்கள். கோவிந்தனை நேற்று முன்தினம் சந்திப்பதற்காக காமராஜ் காரில் புறப்பட்டார்.
கோவிந்தன் வீட்டின் அருகில் சென்றதும், உதவியாளர் கோகிலாவை காரில் உட்கார்ந்து இருக்கும்படி கூறிவிட்டு, காமராஜ் மாடியில் உள்ள கோவிந்தன் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் கோவிந்தனின் மனைவி கல்பனா கதறி அழுதபடி ஓடிவந்தார். அப்போது காமராஜ் கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார் என தெரிவித்தார்.
உடனடியாக மயக்க நிலையில் இருந்த காமராஜை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்து காமராஜின் மனைவி எழில்ரோசி, மருத்துவமனைக்கு சென்றார். இறந்த காமராஜின் தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் காயம் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் திருவிக நகர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கல்பனாவின் சொத்து வழக்கு ஒன்றை காமராஜ் நடத்தி வந்துள்ளார். இந்த வழக்குக்கான கட்டணம் குறித்து கல்பனாவுக்கும் காமராஜுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாம். சம்பவ நாளன்று இருவரும் விவாதித்த போது காமராஜை கல்பனா தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து கீழே விழுந்து காமராஜ் இறந்து போயிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கல்பனாவை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications