7 மாதங்களில் எடப்பாடியார் எத்தனை பைலில் கையெழுத்து போட்டிருக்கார் தெரியுமா?
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின்னர் கடந்த 7 மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3563 பைல்களில் கையெழுத்து போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 7 மாதங்களில் 3563 பைல்களில் கையெழுத்து போட்டிருக்கிறாராம். இதில் நெடுஞ்சாலை துறையில் அதிகப்பட்சமாக 2017 கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறாராம்.
இது எடப்பாடி பழனிசாமி செய்த புதிய சாதனையாக பேசுகின்றனர். ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட 7 மாதங்களில் இப்படி அதிக பைல்களை பார்த்து கையெழுத்து போட்டதில்லையாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது மேஜைக்கு போகும் பைல்கள் தாமதமாகவே நகரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஓபிஎஸ் முதல்வரான பின்னர் இரண்டு மாதத்தில் பல பைல்களுக்கு கையெழுத்து போட்டார் என்று கூறப்பட்டது.

பதவியேற்ற ஈபிஎஸ்
கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை ஆகிய முக்கிய இலாகாக்களை தன் வசம் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போட்டியில் தமிழகம் கோமா நிலையில் இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

முதல்வரின் கையெழுத்து
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஆட்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதில்தான் எடப்பாடி பழனிசாமி 3563 கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

2017 பைல்கள் கையெழுத்து
நெடுஞ்சாலை துறையில் அதிகபட்சமாக 2017 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். உள்துறையில் 714 கோப்புகளில் கையெழுத்து போட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறையில் 515 கோப்புகளைப் பார்த்து கையெழுத்து போட்டிருக்கிறார்.

முக்கிய அமைச்சர்கள்
அமைச்சர்கள் செங்கோட்டையன் 62 பைல்களும், ஜெயக்குமார் 53 பைல்களும் பார்த்துள்ளனர். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் 95 பைல்களைப் பார்த்து கையெழுத்து போட்டுள்ளார். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2 நாட்களில் 144 கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட்டிருக்கிறார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் 2 நாளில் 126 பைல்கள் பார்த்துள்ளார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் குறைவான கோப்புகளையே பார்த்துள்ளனர் என தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன












Click it and Unblock the Notifications