திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு கடல் அரிப்பு.. பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைப்பு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட 200 அடி நீளத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் ஆழமான பகுதியில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறுவுறுத்தி வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது திருச்செந்தூர். கோவில் முன்பு கடல் உள்ளதால் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது திருச்செந்தூர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அது மட்டுமல்லாமல் விடுமுறை தினங்கள் மற்றும் திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் குடும்பத்துடன் புனித நீராடி முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும் உள்வாங்கியும் காணப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கடல் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக கோவில் முன்புள்ள கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 200 அடி நீளத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பால் கடல் நீர் உள்ள பகுதியில் இருந்து மணல் தேங்கியுள்ள கடற்கரை வரை சுமார் ஐந்து அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரை படிக்கட்டு வழியாக கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பக்தர்களின பாதுகாப்பு நலன் கருதி கோவில் நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து 200 அடி நீளத்திற்கு கம்புகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பக்தர்கள் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீராடும் பக்தர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் நீராட எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கை பலகையில், கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக நீராட வேண்டும். தடுப்புகளை தாண்டி நீராடக்கூடாது. கூர்மையான பாறைகள் உள்ளதால் பாதுகாப்பாக நீராட வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications