கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு தலைமறைவான நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது காதலருடன் போடம்பட்டி பகுதியில் உள்ள மாந்தோப்பில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவியின் காதலரை கட்டிப் போட்டுவிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தருமபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அடுத்த நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
சிக்க வைத்த ஆலமரம்
தலைமறைவாக இருந்த பிரகாஷ் சிக்கியதில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் ஜக்கேரி ஏரிக்கரை மீது ராமச்சந்திரன்(42) என்பவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபர், ராமச்சந்திரனிடம் இருந்த பணத்தை மிரட்டி பறித்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார்.
பதற்றத்துடன் பைக் ஓட்டிய அந்த நபர் ஏரிக்கரையில் இருந்த ஆலமரத்தின் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் அந்த நபரின் கால் முறிந்துள்ளது. உடனே ராமச்சந்திரனும் அருகில் இருந்தவர்களும் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications