For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்ஸார் யாருக்காக? – ஆபாசத்திற்கு ஓகே ! அரசியலுக்கு நோ

அன்று முதல் இன்று வரை சென்ஸார் விவகாரங்களை விவரிக்கிறது இக்கட்டுரை.

By S.d. Lakshmanan
Google Oneindia Tamil News

-மணா

தமிழகத்தில் கூடுதலான படங்கள் தயாரிக்கப்பட்டுத் தணிக்கைக்காகக் காத்திருந்தாலும், தணிக்கை வாரியம் என்ன சொல்கிறது?

'’ எந்தவிதமான தலையீட்டையும் தணிக்கை வாரியம் ஊக்குவிக்காது’’

என்கிறது தணிக்கை வாரியம் அண்மையில் வெளியிட்டிருக்கிற குறிப்பு.

Columnist Manaas Manaas Article on Kaala Movie Two

தமிழ் சினிமா பேசத்துவங்கியபோது சென்ஸாருக்கான அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவர்கள் அந்தந்த நகரக் காவல்துறை ஆணையர்கள். அப்போதிருந்த சினிமாட்டோகிராஃப் சட்டம் சொல்வது அதைத்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இருப்பதாகத் தோன்றினாலே போதும், அந்தப்படத்திற்குப் பல சோதனைகள்.படத்திற்கே தடைவிதிக்கப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

1939 ல் மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கம்பெனி சார்பில் பிரபல இயக்குநர் கே. சுப்பிரமணியம் இயக்கிய '’தியாகபூமி’’ படம் திரையிடப்படத் தடைவிதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட இருக்கிறது என்கிற செய்தி தெரிந்ததுமே சென்னையிலுள்ள தியேட்டர்களில் இலவசமாகத் திரையிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி செய்தார் கே.சுப்பிரமணியம். அந்தப் படப்பிரதி இப்போதும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து '’மாத்ருபூமி’’ படத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதே சமயம் கவர்ச்சியை அனுமதிப்பதில் அப்போதிருந்த தணிக்கை வாரியத்திற்குச் சங்கடங்கள் இல்லை. மிகக் குறைவான உடையில் கதாநாயகியாக நடித்த '’டார்ஜான்’’ படங்கள் பரபரப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு ஓடின. நீச்சல் உடையில் தவமணிதேவி என்ற நடிகை தோன்றிய காட்சி அந்தக் காலப் பரபரப்பு.

அப்போதே மக்களுக்கு முன் எதை அனுமதிப்பது? எதை அனுமதிக்க மறுப்பது என்பதற்கான அளவுகோல் தணிக்கை வாரியத்தால் வரையறுக்கப்பட்டுவிட்டது. தணிக்கைக்குழு அதிகாரிகள் அல்லது நியமன உறுப்பினர்களுக்கு இருக்கும் சமூகத்தைப் பற்றிய புரிதலை ஒட்டியே இங்கு ஒரு படம் அனுமதிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ நடந்தது. அவர்களுடைய பார்வையே சினிமாவை நிர்ணயிக்கும் பார்வையாக இருந்தது.

1951 ல் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த '’மர்மயோகி’’ படத்திற்கு ஏ முத்திரை கிடைத்தது. '’அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?’’ -போன்ற 'பொறி’ பறக்கும் வசனங்களைக் கொண்ட 'பராசக்தி’ 1954ல் சென்ஸாருக்கு வந்தபோது தவித்துப் போனார்கள் குழுவினர். தீவிரமாகத் திரும்பத் திரும்பப் பரிசீலனை நடந்தது. தனியே ஒரு தணிக்கைகுழு அமைத்துப் பல வசனங்களும்,காட்சிகளும் வெட்டப்பட்ட பிறகே திரையிட அனுமதி கிடைத்தது

அதே ஆண்டில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த '’ரத்தக்கண்ணீர்’ படத்தில் பல சுளீர் வசனங்கள் சென்ஸார் கட்டை மீறி வெளிவந்தன.

எம்.ஆர்.ராதா: (பிச்சைக்காரராக) '’தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பான் கோவிந்தன்’’

பிச்சை போடுகிறவர் :
'’ தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கிற கோவிந்தன் உன் வினையை ஏம்ப்பா தீர்த்து வைக்கலை?’’

ராதா : ஹை..அப்பா.. அறிவு வந்திருச்சுட்டாப்பா.. இது சோறு வாங்குறதுக்காக பாடுற டூப் பாட்டுடாப்பா’’

1958ல் வெளிவந்த '’ அவன் அமரன்’’ படத்தில் சில காட்சிகள் ஆட்சேபத்திற்குரியதாக உணரப்பட்டு நீக்கப்பட்டன. காஞ்சித்தலைவன் படத்தில் '’ வெல்க காஞ்சி’’ என்கிற பாடல்வரிக்குத் தடை விழுந்தது.

பெற்றால் தான் பிள்ளையா?-படத்தில் வந்த பாடலில் '’ மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’’ என்ற பாடல் வரி பிறகு '’ திரு.வி.க போல்’’ என்று மாற்றம் செய்யப்பட்டது.

'’ எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதில் என்னடி ராதா?’’ என்ற பி.பி.ஸ்ரீனிவாஸின் பாடல் தணிக்கைக்குப் பிறகு '’ எந்தன் பார்வையின் கேள்விக்கு’’ என்று மாற்றப்பட்டது.

இது அன்றைக்கு இருந்த தணிக்கை முறை.

ஆனால் தமிழின் மிக மோசமான கொச்சைச்சொற்கள் மிக மோசமான முறையில் இளம் பிஞ்சுகளிடம் போய்ச்சேருகிற விதத்தில் தற்போது அனுமதிக்கப்பட்ட பல பாடல் வரிகளைச் சொல்லலாம். 'டுபுக்கு’’ போன்ற சொல்லாடல்கள் ஓர் உதாரணம். மாதவிலக்கின்போது வரும் உதிரத்தைக் குறிக்கும் ஒரு தென்மாவட்டச் சொல் ஒரு சிரிப்பு நடிகரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பாலியல்ரீதியான உணர்வை மையப்படுத்திய படங்களுக்குத் தணிக்கையிலிருந்து விதிவிலக்கு '’எப்படியோ’’ கிடைத்துவிடுகிறது. அன்றைக்கு கர்ணன் ஒளிப்பதிவில் வெளிவந்த படங்களைப் போல – பல இளம் இயக்குநர்களின் பாலியல் இச்சையை மட்டும் மையப்படுத்திய படங்கள் தணிக்கைக்குப் பிறகு பெண்கள் பெரும்பாலும் பார்க்க முடியாமல்- ஆண்கள் மட்டும் பார்க்கிற காட்சிகளாக நடக்கிற விசித்திரங்களையும் இங்கு பார்க்க முடியும்.

இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் '’ இருட்டு அறையில் முரட்டுக் குத்து’’

அரசியல்ரீதியான பார்வை கொண்ட ஒரு படத்தில் வரும் வீர்யமான ஒரு வசனத்தை, உக்கிரம் கொண்ட ஒரு காட்சியை மிகக் கச்சிதமாகக் கத்தரிக்கும் அதே சென்ஸார் போர்டு இந்த ஆபாசங்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் மிக மோசமான வசனங்களையும் எப்படி அனுமதிக்கிறது?

இத்தனைக்கும் 1983ல் மாற்றம் செய்யப்பட்ட தணிக்கை வாரிய விதியின்படி '’வக்கிரமான’ வசனங்களும், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் தடைவிதிக்கத் தகுந்தவையாகக் கருதப்பட்டும்- பெண்களுக்கு எதிரான சித்தரிப்புகள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்- தொடர்வதற்கு என்ன காரணம்?

முன்பு நள்ளிரவு நேரத்தில் பாலியல் காட்சிகளைக் கொண்ட படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது – அது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் பட்ட போது -பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொன்ன பதில் ஆளும் அதிகார வர்க்கத்திற்கே உரித்தானது.

'’ உங்களுக்குப் பிடிக்கவில்லையா? டி.வி.யை அணைத்துவிடுங்கள்’’

அதாவது- பார்வையாளனை வெறும் கிளர்ச்சியில் ஆழ்த்தி அவனைத் தனிமைப்படுத்துகிற காட்சிகள் ஆளும்கட்சிக்குச் சாதகமானவை- சிறுவரிகளில் எச்சரிக்கை செய்துவிட்டு டாஸ்மாக் போதையில் ஆழ்த்துவதைப் போல.

ஆனால் பொதுவெளியில் அவனை மற்றவர்களுடன் இணைந்து சமூக உணர்வு கொள்வதைத் தூண்டுகிற படங்கள் திட்டமிட்டுத் தடுக்கப்படுவதையும் தணிக்கை முறையில் சாதாரணமாகக் காண முடியும்.

இந்தக் குரலையே எந்தக் கட்சி வந்தாலும் எதிரொலிக்கின்றன. அதையொட்டியே தணிக்கை வாரியத்தின் குரலும் மாறுபடுகிறது.

காரணம் –இந்த அரசின் பிரதிநிதிகளே தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாகும் போது நிலைமை வேறு எப்படி இருக்கும்?

இலங்கைப் பிரச்சினையைச் சொன்ன சில படங்களுக்கு தணிக்கையில் ஏகக் கெடுபிடி. சில படங்களுக்குத் தாறுமாறான வெட்டுக்கள். சில படங்கள் வெளிவர முடியாத அளவுக்குத் தடை.ஒரு படத்தைப் பரிசீலித்துச் சான்றிதழ் வழங்க 68 நாட்கள் எடுத்துக் கொள்வதாகத் தணிக்கை வாரியமே சொன்னாலும்- ஒரு படம் வெளிவர இங்கு எத்தனை தடைகள்?

இவ்வளவுக்கும் சென்ஸார் போர்டு மீது பலதரப்பட்ட புகார்களும், குற்றச்சாட்டுகளும் குவிந்திருக்கின்றன. பல போராட்டங்களும் அதன் அலுவலகங்களுக்கு முன்னால் நடந்திருக்கின்றன. அண்மையில் இதையடுத்து சென்னையையும் சேர்த்து ஏழு தணிக்கைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்.

ஆட்சியாளர்கள் மாறலாம். மத்தியில் வேறு வேறு கட்சிகளோ, கூட்டணிகளோ ஆட்சியில் அமரலாம்.மாநிலத்திலும் ஆளுகிறவர்கள் மாறலாம். ஆனால் ஆளுகிறவர்களின் பார்வைக்கு ஏற்றபடியே படங்களுக்கான தணிக்கை இங்கு அமலாகிக் கொண்டிருக்கிறது.

பார்வையாளர்களைக் குஷிப்படுத்துகிறதா? வெவ்வேறு இச்சைகளின் பக்கம் அவர்களை நகர்த்துகிறதா?

அவற்றிக்குத் தணிக்கைக்குழுவின் அனுமதி சுலபமாகக் கிடைத்துவிடும்.

பார்வையாளர்களைக் கேள்வி கேட்க வைக்கிறதா? ஆட்சியாளர்களைக் குறித்த விமர்சனங்களை முன்வைக்கிறதா?

அவற்றுக்கான தடைகளை விதிகள் மூலம் இறுக்கும் தணிக்கை வாரியம்.

இது தான் –

இங்குள்ள சினிமாக்களுக்கான சுதந்திரம்.

சினிமாவை உருவாக்குபவர்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல, சினிமா பார்வையாளர்களுக்கான சுதந்திரமும் கூட !

English summary
Columnist Manaa's Article on Rajinikanth's Kaala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X