கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரின் நிலை என்ன? பலி அதிகரிக்கும் அபாயம்! ஆட்சியர் விளக்கம்
கள்ளக்குறிச்சி: விஷ சாராயம் குடித்ததில் உயிரிழப்பு 50 பேர் ஆக உயர்ந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது? எத்தனைப் பேர் மீண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
பாக்கெட் சாராயம்: கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

உயிரிழப்பு: ஆனால், இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்படு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
நடவடிக்கை: இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
நிவாரணம்: இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியுள்ளார். எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பேட்டியில் ஆட்சியர் கூறியதாவது,
30 பேர் கவலைக்கிடம்: "கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கள்ளச்சாராயம் குடித்து பாதிப்படைந்ததாக 165 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 47 பேர் உயிரிழந்தனர். 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 50-60 பேர் நல்ல நிலைமையில் இருக்கின்றனர். 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உயிரிழந்தவர்களில் தற்போது வரை 29 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை பெற்றுவருபவர்களை காப்பாற்ற சிறப்பு மருத்துவர்களை உள்ளடக்கிய குழுக்கள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டிருக்கின்றன. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி என இரண்டு பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன உதவிகள் செய்யப்போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், "அவர்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அரசு திட்டங்கள் மூலம் உரிய உதவிகள் செய்யப்படும். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, சாராயம் குடித்திருந்து, உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நாங்கள் சுகாதார ஊழியர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications