இரவெல்லாம் என் வீட்டுக்குள் கல் வீசுகிறார்கள், கொலை செய்ய சதி... காங். எம்.பி. புகார்
தேனி: எனது உயிருக்கும் அச்சுறுத்தல் வந்துகொண்டிருக்கிறது. உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேடபட்டி என நான் செல்லும் இடங்களில் என்னை கொல்ல சதி நடக்கிறது. இரவு நேரங்களில் என் வீட்டிற்குள் கல் வீசும் சத்தம் கேட்கிறது என்று கூறியுள்ளார் தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண்.
பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆரூண். அப்போது அவர் கூறுகையில், 2-வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எனது பணிகளை செவ்வனே செய்து வருகிறேன்.
கடந்த 2 ஆண்டுகாலமாக தனிப் பட்ட முறையில் எனது வீடு மற்றும் அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடந்து வருகிறது. எனது உயிருக்கும் அச்சுறுத்தல் வந்துகொண்டிருக்கிறது.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேடபட்டி என நான் செல்லும் இடங்களில் என்னை கொல்ல சதி நடக்கிறது. இரவு நேரங்களில் என் வீட்டிற்குள் கல் வீசும் சத்தம் கேட்கிறது.
போலீசார் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் பாதுகாப்பு அளிப்பதில்லை.
அரசியல் பிரமுகர் ஒருவர் தூண்டுதலின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கருதுகின்றனர். ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி காங்கிரஸ் கட்சிக்காரர்களை இழிவாக பேசி வருகிறார். எனக்கு பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி.ராமானுஜம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும். இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு மாநாட்டிற்கு பிரதமர் செல்லாததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக இந்திய அரசு ரூ.680கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கை அரசுடன் நட்புணர்வு இல்லாமல் அங்குள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாது. இதற்காகவே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications