ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டால் தெரியும்.. அவர் யாரென்று.. ப.சிதம்பரம் பேட்டி!
காரைக்குடி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்கும் போது, சீமானுக்கு எவ்வளவு பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் என்று கூறியுள்ள அவர், திராவிடம் என்பது ஆரியர் அல்லாத இனத்தை குறிப்பது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் சீமானை கண்டித்து பெரியார் ஆதரவு அமைப்புகள் கடுமையான போராட்டத்தை நடத்தினர். பெரியார் தொடர்பான கருத்துகளுக்கு இதுவரை சீமான் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இருந்தாலும் பொது விவாதத்திற்கு தயார் என்று சீமான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

அதேபோல் பெரியாரின் சொந்த ஊரான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் இருந்து அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதனால் இடைத்தேர்தலில் திமுக vs நாதக இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக தரப்பில் விசி சந்திரகுமாரும், நாதக சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே பரப்புரையை இரு கட்சியினரும் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தடுத்து அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியாரை கடுமையாக விமர்சித்துவிட்டு சீமான் அவரின் சொந்த மண்ணில் எப்படி வாக்கு சேர்க்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சீமானின் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், பெரியார் காலத்தில் இன்று இருப்பதை போல் விதிகள் மத்திய அரசு இருந்திருந்தால், இன்று காவல்துறை நடப்பதை போல் அன்று நடந்திருந்தால், வாழ்நாள் முழுக்க பெரியார் சிறையில் இருந்திருப்பார்.
பெரியார் என்பது தனிமனிதல்ல. பெரியார் என்பது சமூக இழிவுகளை எதிர்த்த ஒரு பெரிய போர், ஒரு இயக்கம். அந்த சமூக இழிவுகளை எதிர்த்த இயக்கத்தை தற்போது களங்கப்படுத்த கூடாது. பெரியார் வாழ்ந்து முடித்துவிட்டார். பெரியார் எதை நினைவுப்படுத்துகிறார் என்றால், சமூக இழிவுகளை அவர் எதிர்த்தார். கடுமையாக எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
அவரின் எதிர்ப்பால் பல சமூக இழிவுகள் ஒழிக்கப்பட்டன. இன்றும் சில சமூக இழிவுகள் இருக்கின்றன. அதனை எதிர்ப்பது தான் பெரியார். அதனை புரிந்து கொள்ளாமல் பெரியாருடன் சண்டை போடுவதாக நினைத்து கொள்கிறார். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். பெரியார் பிறந்த ஊரில் இப்படி சொல்லட்டுமே..
எத்தனை மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். திராவிடம் என்பது ஆரியர்கள் அல்லாத ஒரு இனத்தை குறிக்கிறது. அதேபோல் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. 5 மாநிலங்களையும் சேர்த்தது தான் திராவிடம் என்று தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் கருத்தை தொடர்ந்து சீமானின் பரப்புரை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications