குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலம்..வண்ண லேசர் ஒளிகளால் ஜொலித்த அருவிகள்..பயணிகள் உற்சாகம்
தென்காசி: அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்ப்பதே ஆனந்தம். குற்றால அருவிகளில் தண்ணீர் வர்ண ஜாலத்துடன் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர். சாரல் திருவிழா குற்றாலத்தில் களைகட்டியுள்ள நிலையில் அருவிகள் அனைத்தும் லேசர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கின்றன.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை துவங்கியதால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுக்கிறது.
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

சாரல் திருவிழா
குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால் அங்கு சாரல் திருவிழா தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் சாரல் விழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டும் கேக் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகள்
விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம். குற்றாலம் என்ற பெயர் பராந்தகச் சோழன் கல்வெட்டில் இருந்து வருகிறது,இலக்கிய காலத்தில் இருந்து செழுமை மிக்க வரலாற்று தொடர்புடைய ஊர் குற்றாலமாகும் இதனால் இவ்விழாவில் நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். திரைப்பட நடிகர் சூரி, சின்னத்திரை புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம் நடைபெற்றது.

அருவிகளில் வர்ண ஜாலம்
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் அனைத்தும் லேசர் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன. அதனை தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அருவி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் வண்ண மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அருவி நீர்வீழ்ச்சி பகுதியில் கலர் கலர் மின் விளக்குகளால் ஜொலிக்கவிட்ட காட்சி சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மலர் கண்காட்சி
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய தினம் குற்றாலம் சாரல் திருவிழா துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று, மலர் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் ஊட்டி ஓசூர் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு தோட்டக்கலை துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி, காய்கறி, பழ கண்காட்சிகள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சிகளும் இடம்பெற்றன. இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.












Click it and Unblock the Notifications