For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அரசிடம் ஜெ. மென்மையாக நடப்பது ஏன்?.. சிபிஎம் கேள்வி!

Google Oneindia Tamil News

CPM asks Jayalalitha why she is soft on Modi govt?
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு மீது மென்மையான போக்கையேக் கடைப்பிடித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றன. இதற்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்த 10 ஆயிரம் குழுவினர் வீடு, வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்க இருக்கிறோம்.

வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் (ஜி.ராமகிருஷ்ணன்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியனும் கலந்து கொள்கிறோம். இதே போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரண்டு கட்சிகளின் மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்வார்கள்.

மத்தியில் பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிறது. முந்தைய காங்கிரஸ் அரசை போல்தான் பிரதமர் மோடியும் அதே பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். பட்ஜெட்டில் ரூ.48 ஆயிரம் கோடி பொது பங்குகளை தனியாருக்கு விற்க போவதாக கூறப்பட்டு உள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க போவதாக கூறி இருப்பது தவறான அணுகுமுறை ஆகும்.

ஜெயலலிதாவும் மத்திய அரசு மீது மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்து அதனை அரசு சார்பில் வாங்கிய ஜெயலலிதா தற்போது ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொது பங்குகளை விற்பனை செய்ய இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட உள்ள மின் உற்பத்தி திட்டத்திற்கான ரூ.6 ஆயிரம் கோடி டெண்டரை எடுப்பதில் திருச்சி பெல் நிறுவனத்திற்கும், சீனாவை சேர்ந்த ஒரு கம்பெனிக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பெல் நிறுவனத்துக்கே டெண்டரை வழங்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நடந்துள்ள 18 ஆயிரம் சாலை விபத்துக்களில் 16 ஆயிரம் விபத்துக்களுக்கு காரணம் டிரைவர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால்தான் என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதோடு மதுவின் தீமைகளுக்கு எதிரான பிரசாரத்தையும் தொடங்க வேண்டும்.

இலங்கையில் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகாரங்களை பரவலாக்க வேண்டும். ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழ் எம்.பி.க்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது போல் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

English summary
CPM state secretary G Ramakrishnan has asked Why CM Jayalalitha is going soft on Modi govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X