அய்யோ பாவமே! ராஜ்யசபா சீட்.. கைவிரித்த அதிமுக.. திமுகவை பாராட்டி பாராட்டி கையேந்தும் தேமுதிக
சென்னை: ராஜ்யசபா எம்பி சீட் பதவியை தேமுதிகவுக்கு தர முடியாது என அதிமுக கைவிரித்துவிட்டது; இதனால் திமுகவிடம் ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு தாமாகவே முன்வந்து வலிய வலிய பாராட்டுகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறது தேமுதிக; ஆனால் திமுகவோ, தேமுதிகவை பற்றிய சிந்தனையே இல்லாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் 6 எம்பி இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த 6-ல் ஒரு இடத்தை எப்படியாவது அதிமுகவிடம் இருந்து பெற்றுவிட வேண்டும் என்பதில் தேமுதிக தீவிரமாக இருந்தது.

ராஜ்யசபா தேர்தல் வரப்போகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியான உடனேயே, அதிமுக ஏற்கனவே எங்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டது; ராஜ்யசபா வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் என்றார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அப்படி எல்லாம் தேமுதிகவுக்கு வாக்குறுதி எல்லாம் தரவே இல்லை என ஒரே போடாகப் போட்டுவிட்டார். இதனால் தேமுதிக அதிர்ச்சியில் உறைந்து போனது.
இந்த நிலையில் ஒற்றை ராஜ்யசபா சீட்டை எப்பாடுபட்டாவது திமுகவிடம் வாங்கியே தீருவது; அதிமுகவுக்கு நோஸ் கட் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் தேமுதிக தலைமை உறுதியாக உள்ளது. இதனால் தமிழக அரசு கையில் எடுக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் எந்த நிபந்தனையும் விமர்சனமும் இல்லாமல் முழு வீச்சில் வலிய வலிய ஆதரவு தந்து கொண்டே இருக்கிறது தேமுதிக.
தமிழக அரசு கூட்டிய தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசுடனான மோதல், இந்தி மொழி திணிப்பு உள்ளிட்டவைகளில் திமுக அரசுக்கு உறுதுணையாகவே நிற்போம்; தமிழக அரசின் பட்ஜெட்டுக்குப் பாராட்டு என தேமுதிக மீண்டும் மீண்டும் வலை வீசி வருகிறது. தேமுதிகவின் இந்த 'ஐஸ்' வைக்கும் வேலையே ராஜ்யசபா சீட்டுக்காக மட்டும்தான் என்பது வெட்ட வெளிச்சமான ஒன்றுதான். ஆனாலும் திமுக தலைமையோ தேமுதிகவை சீண்டுவதாக கூட இல்லை என்கிற நிலைமைதான்.
எப்படி இருந்த நான்?
தேமுதிகவைப் பொறுத்தவரை இன்றைய ஆளும் திமுகவையே ஓரம் கட்டி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற காலமும் இருந்தது. ஆனால் இப்போ தேமுதிக என்கிற கட்சியை சீண்டுவார் யாரும் இல்லை என்கிற நிலைமைதான். 2021 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணியே அமைக்க முன்வராத சூழ்நிலையில் தேமுதிக முன்வந்தது; அப்போதும் கூட ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியும் பெறும் நோக்கத்தில்தான் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியையே அமைத்தது தேமுதிக. இப்போது அதிமுக கைவிரித்துவிட்டதால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
திமுக அணியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி ராஜ்யசபா சீட் கிடைக்குமா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது; இந்த நிலையில்தான் தேமுதிகவும், அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் கல்லை வீசிக் கொண்டே இருக்கிறது.. ஆனால் திமுகவோ இப்படி ஒரு வலை வீசப்படுவதாக கூட சிந்திக்காமல் பயணித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நடுத்தெருவில் கைவிடப்பட்ட நிலையில்தான் தேமுதிகவின் தற்போதைய நிலைமை இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications