For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21 வயதுள்ளவர்களுக்கே மது விற்பனை: மதுவிலக்கு அமல்படுத்த அரசுக்கு தேமுதிக யோசனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக யோசனை தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை - கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

DMDK wants gradual prohibition in Tamil Nadu

கலாமுக்கு இரங்கல்

தமிழனாக பிறந்து, அறிவியல் விஞ்ஞானியாக வளர்ந்து குடியரசுத்தலைவராக உயர்ந்து அந்த பதவிக்குரிய கண்ணியத்திற்கும், பெருமைக்கும் சிறிதும் களங்கம் ஏற்படாவண்ணம் அப்பதவியை வகித்தவர். பாரதரத்னா, பத்மவிபூஷன், பத்மபூஷன் போன்ற பல உயரிய விருதுகளை பெற்று, இந்தியாவின் "ஏவுகணை மனிதர்" என்று உலக நாடுகளால் போற்றப்பட்ட மறைந்த இந்தியாவின் அறிவுச்சுடர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.

சசி பெருமாளுக்கு இரங்கல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தனி மனிதனாக இருந்து மதுவுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தி, போராட்டக் களத்திலேயே தன்னுயிரை ஈந்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள் அவர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு பாடுபட்டு, உழைத்து, சிறப்பான முறையில் பணியாற்றி, அண்மையில் இயற்கை எய்திய கழக நிர்வாகிகளுக்கும், சார்பு அணி நிர்வாகிகளுக்கும் மற்றும் கழக தொண்டர்களுக்கும் இப்பொதுக்குழு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறது.

ஜெயலலிதாவிற்கு கண்டனம்

மாண்புமிகு பாரத பிரதமர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா முதல்வர்கள், பூடான், மேகாலயா, கேரளா கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல மாநிலங்களின் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வருகைதந்து, முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக்கூறி, அந்த நிகழ்வில் பங்கேற்காமல் தமிழ்நாட்டிற்கு அவமரியாதையையும், தமிழர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிட்டார். இச்செயலை செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இறுதி சடங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தமைக்கான உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு யோசனை

மதுவால் ஏற்படும் கொடுமைகள் மற்றும் குடும்பங்கள் சீரழிவது பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதிமுக அரசு மது விற்பனை செய்வதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தில் மூன்று தலைமுறை மதுவால் கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில், ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் என்கின்ற அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

சசிபெருமாளுக்கு மரியாதை

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை நடைமுறைபடுத்தி, மக்கள் மத்தியில் தானும் மதுவிற்கு எதிரானவர் என்று நிரூபிக்கவேண்டும். அதுவே பூரண மதுவிலக்கை வலியுறுத்திய அனைவரின் போராட்டத்திற்கும், காந்தியவாதி சசிபெருமாளின் உயிரிழப்பிற்கும் அதிமுக அரசு செலுத்தும் மரியாதையாகும். இதை உடனடியாக செயல்படுத்தவேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

காவல்துறைக்குக் கண்டனம்

தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஜனநாயக முறைப்படி அகிம்சைவழி போராட்டமான, மனிதசங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல், சாலையோரத்தில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தேமுதிக தொண்டர்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதையும், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும், எங்கள் அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் மற்றும் தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழகம் முழுவதும் கைது செய்த அதிமுக அரசின் கைப்பாவையான காவல்துறையை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இரட்டை வேடம்

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் பாக்கி வைத்துள்ளன. இதை பெற்றுத்தரவேண்டிய அதிமுக அரசோ "பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்காட்டி" இரட்டைவேடம் போடுகிறது. தற்போது 2015-2016 நிதியாண்டில் வெட்டப்படும் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ரூபாய் 1700 மட்டுமே வழங்கப்படுமென தனியார் சர்க்கரை ஆலைகள் கூறிவருவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 வழங்கவேண்டுமென தமிழக அரசை கேட்டுகொள்கிறது.

கால்வாய்களை தூர்வார நடவடிக்கை

டெல்டா விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையை திறந்துவிடாததால் குறுவைசாகுபடி செய்யமுடியவில்லை. தற்போது அணையை திறந்துவிட தேதியை அறிவித்தபின்பும், கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கான கால்வாய்கள், செடி கொடிகளாலும், சேறு சகதிகளாலும், தூர்ந்துபோய் தூர்வாரப்படாமல், மதகுகளின் பழுது நீக்கப்படாமல் உள்ளன. அடிப்படை பணிகளை செய்யாமல் தண்ணீர் திறப்பதை, டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் செயலாக கருதுவதோடு, இச்செயற்குழு இதைவன்மையாக கண்டிப்பதுடன், போர்க்கால அடிப்படையில் அப்பணிகளை நிறைவேற்றவேண்டுமென அதிமுக அரசை வலியுறுத்துகிறது.

டெல்டா மாவட்டங்களில்

டெல்டா மாவட்டமான திருவாரூரில், விவசாய பூமியில் மீத்தேன்வாயு எடுக்கும் சோதனை முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திடவேண்டுமென்றும், "மோட்டார் வாகன சட்டம்" தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களின் உரிமையை பாதிப்பதாகவும் இருப்பதாககூறப்படுவதால், இச்சட்ட மசோதாவை அனைத்து தரப்புமக்களின் கருத்தறிந்து நிறைவேற்ற வேண்டும்.

தண்ணீர் பஞ்சம்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு நாளும் குடிநீர் கேட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். சென்னை மாநகரில் ஐந்தாறு நாட்களுக்கு ஒருமுறையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும், குடிநீர் விநியோகம் செய்யும் அவலநிலை உள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில், பெரும்பகுதியை தண்ணீருக்காக செலவு செய்யும் மோசமான நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே வெற்று அறிவிப்புகளை வெளியிடாமல், தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிரானைட் முறைகேடு

கனிம வளங்கள் தனி நபர்களால் சுரண்டப்படுவதை தடுக்கும் வகையில் மணல், தாதுமணல், கிரானைட், கல் குவாரிகளை தமிழக அரசே நேரடியாக நடத்தவேண்டும். அதன்மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும். சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படாவண்ணமும், நிலத்தடி நீர் மட்டம் குறையாத வகையிலும், பொதுமக்களை பாதிக்காத நிலையும் அதன் மூலம் உருவாக்கப்படும். எனவே உடனடியாக தனி நபர்களால் நடத்தப்படும் குவாரிகளை மீட்டு, தமிழக அரசே நடத்தவேண்டும்.

ரத்து செய்க

சட்டமன்றம் என்பது தமிழகமக்களின் பிரச்சனையை பேசவும், அதற்காண தீர்வை காண்பதற்காகவும், மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தவும்தான் இருக்கிறது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை சுமார் ஒருவருட காலம் இடைநீக்கம் செய்து, மற்றவர்களை கூட்டத்தொடர் முழுவதும் வெளியேற்றியதை ரத்துசெய்ய வேண்டும். சுமார் ஆறு மாதகாலமாகியும் துறையின் மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக தமிழக சட்டமன்றத்தை கூட்டவேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.

சட்டம் ஒழுங்கு

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. இதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரத்தின்கீழ் செயல்படும் காவல்துறையை சார்ந்த, காவல் துணைக்கண்காணிப்பாளரே செம்மரக்கடத்தலில் ஈடுபடுவதும், கொலைசெய்வதும், காவல் ஆய்வாளர் கொள்ளையடிக்கும் கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதும், தலைமை காவலர் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதும் போன்ற "வேலியே பயிரை மேயும் நிலைதான்" தமிழகத்தில் உள்ளது. சமூக விரோதிகளை மட்டுமல்ல இதுபோன்ற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்யும், இவர்களை போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை செம்மைபடுத்தவேண்டும்.

சூரிய மின்சக்தி

தமிழக மின்வாரிய அதிகாரிகள் மின்னுற்பத்தி பணிகளை வேண்டுமென்றே தாமதம் செய்து, செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி, அதன் மூலம் தனியாரிடம் அதிக விலைகொடுத்து மின்சாரம் வாங்கியதில் ஒரு லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் குறைந்த விலைக்கு கிடைத்தும், அதானி நிறுவனத்துடன் சூரியசக்தி மின்சாரத்தை அதிக விலைகொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வழக்கு குறித்த உண்மை நிலவரத்தை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை அதிமுக அரசு வெளியிடவேண்டும். அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், அதைஉடனடியாக நிறுத்தவேண்டுமென்றும், அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டுமென்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

பறக்கும் சாலைத் திட்டம்

தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம், 2009ஆம் ஆண்டு சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்டது. அது பயன்பாட்டிற்கு வந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்திருக்கும். ஆனால் அதிமுகஅரசின் ஆணவப்போக்காலும், அலட்சியத்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தாலும், மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் உயர்அதிகாரிகள் நேரில்வந்து கூறியும், சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தை அனுமதித்தும், செயல்படுத்தாமல் முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ள அதிமுக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அத்திட்டங்களை செயல்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறது.

நிதிநிலை மோசம்

தமிழக அரசின் கடன் 2,11,483 கோடி ரூபாய், மின்வாரியம் மற்றும் போக்குவரத்து துறையில் சுமார் 2 லட்சம் கோடி ஆகமொத்தத்தில் தமிழ்நாட்டின் இன்றைய கடன்தொகை 4 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதனால் அதிமுக அரசால் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தமுடியவில்லை. தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கும் கொண்டுசெல்லவில்லை. நிதிநிலை மிக மோசமாக உள்ளதை அதிமுக அரசு எப்படி சமாளிக்கப்போகிறதென்று, தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

English summary
DMDK has urged the govt of Tamil Nadu to implement prohibition in Tamil Nadu gradually.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X