சென்னையில் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பேனர் - கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் விதி முறைகளை மீறி அதிமுகவினர் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல மாதங்களுக்குப் பிறகு, ஏன் பல ஆண்டு களுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் செயற்குழுவும், பொதுக்குழுவும் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பொதுக்குழு என்றால் கொடிகளைக் கட்டி அலங்காரம் செய்வது கட்சிகளுக்கு வழக்கம்தான்.

ஆனால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து, திருவான்மியூரில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் பொதுக் குழு நடைபெற்ற அரங்கம் வரை சாலைகளில் இரு மருங்கிலும் மற்றும் நடுவிலும் என மூன்று வரிசைகளில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு வளைவுகள், பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றை அடர்த்தியாகக் கட்டி, நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்லத் தடையாகவும், சாலைப் போக்குவரத்துக்குப் பெரிதும் இடைஞ்சலாகவும் நெருக்கடியை உருவாக்கினார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட் அவுட்களை வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டிருந்த "பேனர்"களை அகற்ற வேண்டுமென்று அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும், காவல் துறையினர் அதைக் கண்டு கொள்ளவில்லை.
எனவே அந்தக் கட் அவுட்களை அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அகற்றும் பணியிலே ஈடுபட்டபோது, அ.தி.மு.க.வினர் அங்கே வந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். காவல் துறையினர், தாக்கப் பட்டவர்களில் மூவரைக் கைது செய்து சிறையிலே அடைத்துள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகக் காவல் துறையினர் பின்பற்றி வரும் தனிச் சிறப்பான (?) நடைமுறை என்பதை நாடறியும்!
போக்குவரத்துக்கு நேர்ந்தது எப்படிப்பட்ட நிலை தெரியுமா? 10.30 மணிக்குப் பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டபோதிலும், காலை 8 மணியளவில் சென்னை பிராட்வே, அயனாவரம், பெரம்பூர் உள் ளிட்ட பகுதிகளிலேயே திருவான்மியூர் நோக்கிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் அடையாறு சிக்னல் அருகிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
அங்கிருந்து திருவான்மியூருக்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. 10 மணி முதல் எந்த வாகனங்களும் அடையாறு சிக்னலில் இருந்து திருவான்மியூர் செல்ல தடை விதிக்கப்பட்டு விட்டன. முதல் அமைச்சரின் கார் அந்த வழியாக வருகிறது என்பதற்காக 3 மணி நேரம் போக்குவரத்தே அந்தச் சாலையில் தடை செய்யப்பட்ட கொடுமையும் நடைபெற்றிருக்கிறது. அவர்களுடைய அதிகாரப்பூர்வ நாளேட்டில் அன்று எத்தனை பக்கங்கள் தெரியுமா? 108 பக்கங்கள்; அனைத்தும் அமோக விளம்பரங்கள்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications