For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த 2 விஷயங்கள் மட்டும் ஸ்டாலினிடம் இருந்தால்.. !

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

திமுக தலைவர் மு.கருணாநிதியின் சட்டமன்ற பணிகளின் வைர விழா சிறப்பாகவே ஜூன் 3 ம் தேதி சென்னையில் நடந்ததிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக செயற் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த தேசீய கட்சிகளின் பிரதிநிதிகளும், பிராந்திய கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலவைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா, திரிணாமுல் கட்சியின் எம் பி டெரக் ஓ பிரையன், பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

DMK Leader Stalin Needs the Political Acumen like President Karunanidhi

இத்தகைய கூட்டத்தை முதன் முறையாக ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு முன்பு கருணாநிதி இதுபோன்ற எத்தனையோ கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அவற்றில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கருணாநிதி தற்போது உடல் நலம் குன்றியிருப்பதால், ஸ்டாலின் இந்த கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் கருணாநிதியை புகழ்ந்ததை விடவும் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதுதான் அதிகம். நிதிஷ் குமார் பிஹாரை போல தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் இது நடக்கும் என்றும் கூறினார். மற்ற தலைவர்கள் அனைவரும் மதச் சார்பின்மை இந்தியாவில் போற்றிப் பாதுகாக்கப் பட திமுக வின் பங்கு, குறிப்பாக ஸ்டாலின் போன்ற தலைவர்களின் பங்கு மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது என்று பேசினர்.

நிகழ்ச்சியின் மற்றோர் முக்கியமான நிகழ்வு கனிமொழிக்கு கூட்டத்தில் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம். மேடையில் கனிமொழி இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு பேச வாய்ப்புத் தரப்படவில்லை. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் வாதி கட்சி போன்ற கட்சிகளின் சார்பில் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு விழாவுக்கான அழைப்புகள் அனுப்பபட்டனவா என்றும் தெரியவில்லை.

எதிர்கட்சியில் இருக்கும் போது இது போன்று பல தலைவர்களும் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஏதாவது ஒரு நிகழ்வு தொடர்பாக கூட்டங்களை நடத்துவது வழக்கமான நடைமுறைதான். 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தியிருக்கிறார். இதில் பாஜக சார்பில் ரவி ஷங்கர் பிரசாத், அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஹரியானாவின் முக்கிய தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர். ''இது வழக்கமான, ஒரு பழைய டெக்னிக்தான் (நடைமுறைதான்_ ''என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

ஆனால் இந்த கூட்டங்களுக்குப் பிறகு சம்மந்தப்பட்ட அந்த தலைவர் (இதில் ஸ்டாலின்) என்ன சாதித்தார் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும். ஏனெனில் வழக்கமாக இது போன்ற கூட்டங்களில் அந்த மேடையிலேயே இது வரும் தேர்தலுக்கான கூட்டணி என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விடும். அப்படித்தான் கருணாநிதி கடந்த காலங்களில் இதுபோன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை வரும் தேர்தலுக்கான கூட்டணியாக அந்தக் கூட்டத்திலேயே பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

2004 - 2014 காலக் கட்டங்களில், அதாவது பத்து ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தன்னுடைய முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்தததற்கு காரணம் இரண்டு முக்கியமான தலைவர்கள். இந்த இரண்டு தலைவர்கள்தான் ஐமு கூட்டணி யை கட்டமைத்தார்கள். அவர்களுடைய அரசியல் சாதுர்யம் தான் பாஜக வை டில்லி ஆட்சிக் கட்டிலில் இருந்து தூரத்திலேயே நிறுத்தி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மற்றும் மு.கருணாநிதி என்று இந்த இரண்டு தலைவர்கள்தான் பத்தாண்டுகள் ஐமுகூ அரசு நீடிக்க காரணமாக இருந்தார்கள்.

சுர்ஜித் மறைவுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2008 ல் மன்மோஹன் சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. கம்யூனிஸ்டுகளும் திமுக வை விட்டு விலகிப் போனார்கள். ஆனாலும் ஐமுகூ அரசு பத்தாண்டு நீடித்ததற்கு முக்கியமான காரணம் சுர்ஜித்தும், கருணாநிதியும் தான். இந்த இருவரும் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசை தோற்கடிக்க போட்ட வியூகம் தான் ஐமு கூட்டணியாக உருவெடுத்தது. இந்த இரு தலைவர்களும் போட்ட வியூகம் தான் அந்த இரண்டு தலைவர்களும் ஐமு கூட்டணியிலிருந்து அவர்களது கட்சிகள் விலகினாலும் மன்மோஹன் சிங் அரசுக்கு முழு ஆட்சிக் காலத்தை நிறைவேற்ற உதவியது.

தன்னுடைய அரசியல் ஆளுமையை, ஆங்கிலத்தில் சொன்னால், political personality ஐ அகில இந்திய அளவில் விஸ்தரித்துக் கொள்ள ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டம்தான் ஜூன் 3 ம் தேதி கூட்டம். ஆனால் அதே நேரத்தில் இன்று டில்லியில் திமுகவின் முகமாக இருக்கும் கனிமொழியை, விழா மேடையில் பேச அனுமதிக்காமல் இருந்ததன் மூலம் கட்சி இன்று முற்றிலும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் ஸ்டாலின் அகில இந்திய தலைவர்களுக்கு நிருபித்து விட்டார்.

நிச்சயமாக இன்றைய நிலைமையில் திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருந்து கொண்டிருக்கிறது. திமுக வின் இரண்டு அறக்கட்டளைகள் (இவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 7,000 கோடிகளை தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்த மூத்த திமுக முன்னோடிகள்). அண்ணா அறிவாலயத்தின் மொத்த கட்டுப்பாடும், (அதில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட) ஸ்டாலின் வசம்தான் இருக்கிறது. முரசொலி பத்திரிகையும், கலைஞர் டிவியும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருந்து கொண்டிருக்கிறது.

காலங் காலமாய் திமுக வின் இந்த இரண்டு அறக்கட்டளைளையும் யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள்தான் திமுக வை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். கட்டுப்படுத்த முடியும். இதுதான் திமுகவின் வரலாற்றில் ஆரம்பம் முதல் இன்று வரையில் நாம் காணக் கிடைக்கும் காட்சியாகும். திமுக பொருளாளராகவும் ஸ்டாலின் தற்போதும் இருக்கிறார். இவை எல்லாம் சரிதான். ஆனால் அகில இந்திய அளவில் தன்னுடைய அரசியல் ஆளுமையை விஸ்தரித்துக் கொள்ள ஆசைப்படும் ஸ்டாலின் அதில் எந்தளவுக்கு வெற்றிப் பெறப் போகிறார் என்பதுதான் கேள்வி. தகுதி என்று பார்த்தால் நிச்சயம் அகில இந்திய அளவில் ஒரு தலைவராக வருவதற்கான தகுதிகள் ஸ்டாலினிடம் இருக்கத் தான் செய்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று திமுக வுக்காக களப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. ஆட்சியில் இல்லாத காலத்திலும் திமுக வுக்காக அவரது களப் பணி என்பது, அதாவது தமிழகம் முழுவதும் சுற்றி, சுற்றி அரசியல் களப் பணி செய்வதென்பது முக்கியமானது. .

ஆனால் ஸ்டாலினின் பலவீனமாக பார்க்கப்படுவது, கருணாநிதியை போல ஸ்டாலின் எல்லோரையும் (கட்சிக்குள்ளேயும், வெளியேயும்) அரவணைத்துப் போகும் குணாம்சம் - ஆங்கிலத்தில் சொன்னால் Inclusiveness - இல்லாமல் இருப்பது. அனைவரையும் அரவணைத்துப் போகும் குணாம்சம் அரசியலில் மிக மிக முக்கியாமானதோர் குணமாகும். கருணாநிதி அளவுக்கு கூர்த்த அரசியல் மதி - ஆங்கிலத்தில் சொன்னால் Political Acumen - இதுவரையில் ஸ்டாலினிடம் இல்லாமல் இருப்பது ஒரு குறைதான். . வரும் காலங்களில் இந்தக் குறையை எவ்வளவு விரைவில் ஸ்டாலின் நிவர்த்தி செய்கிறாரோ அந்தளவுக்கு அவர் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் வெற்றி பெறுவார். ஆனால் இந்த இரண்டு குறைகளும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தால் ஸ்டாலினின் அரசியலில் அது தற்போது அவர் ஆசைப்படும் சிகரங்களை எட்ட விடாமல் நிச்சயம் தடுத்து விடும்.

உடனடி நெருக்கடியாக ஸ்டாலினுக்கு தற்போது இருப்பது அடுத்த ஓரிரண்டு மாதங்களில் 2ஜி ஊழல் வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு. இந்த தீர்ப்பில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையாகி விட்டால் அதன் பிறகு தமிழக அரசியிலில் ஸ்டாலினுக்கு ராஜபாட்டை தயாராகி விட்டது என்று பொருளாகும். மாறாக தீர்ப்பு வந்து சம்மந்தப் பட்டவர்கள் சிறைக்கு அனுப்ப பட்டால் அது நிச்சயம் ஸ்டாலினின் எதிர்காலத்தையும் கண்டிப்பாக பாதிக்கத் தான் செய்யும்.

ஒரு விதத்தில் பார்த்தால் இன்று தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும், அதாவது எல்லா ஜாதியினர் மற்றும் அனைத்து மதத்தினர் மத்தியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் ஸ்டாலின்தான். ஸ்டாலினையும், திமுக வையும் விரும்புபவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்று நாம் பார்த்தால் அதில் அனைத்து ஜாதிகளை சார்ந்தவர்களும், அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு தலைவர் இன்று தமிழகத்தில் இல்லை. ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் ஒரு ஜாதியின் தலைவர்களாகத்தான் பார்க்கப் படுகிறார்கள், பார்க்கப் படுவார்கள் .....அந்த விதத்தில் பார்த்தால் ஸ்டாலின் தான் ஜாதி, மதங்களைத் தாண்டி தமிழக வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறார்.

மோடிக்கு எதிரான ஒரு மெகா கூட்டணி தமிழகத்தில் அமைந்தால் அதன் தலைவராக ஸ்டாலின் தான் இருப்பார். அது மோடியின் கோபத்தை ஸ்டாலின் பக்கம் திருப்பலாம். ஆனால் வெளிப்படையாகவே மோடிக்கு எதிரான ஒரு அரசியல் அணி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது ஜூன் 3 ம் தேதி கூட்டத்தில் நிருபிக்கப் பட்டு விட்டதால், சிபிஐ, வருமான வரி துறை மற்றும் அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை ஸ்டாலினுக்கு எதிராக ஏவி விடுவது மோடிக்கு மிகவும் கடினமான காரியம்தான். ஏனென்றால் இப்போதே மோடிக்கு எதிரான பல கட்சிகளும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை ஸ்டாலின் ஏற்படுத்தி விட்டார். அதனால் இனிமேல் மோடி ஏதாவது பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது அரசியல் பழி வாங்கும் செயல் என்றுதான் பார்க்கப்படும்.

ஆகவே ஸ்டாலின் அரசியலில் வெற்றி பெறுவதும், வெற்றி பெறாமல் போவதும், முழுக்க, முழுக்க ஸ்டாலினிடம் தான் இருக்கிறது. 30 சதவிகித வாக்குகளை நிரந்தரமாக தன் வசம் வைத்திருக்கும் திமுக வுக்கு ஸ்டாலினை தவிர்த்த வேறு தலைவர்கள் இன்று அக்கட்சியில் இல்லை. அனைவரையும் அரவணைத்துப் போதல் மற்றும் அரசியல் கூர்த்த மதி இந்த இரண்டையும் தன்னுடைய தந்தையிடம் இருந்து ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கொண்டார் என்றால் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஆவதை எவராலும் தடுக்க முடியாது.

எத்தனை ''மோடி வித்தைகள்'' நிகழ்த்தப்பட்டாலும் அவற்றை வென்று ஸ்டாலினால் நிச்சயம் தமிழக அரசியலின் உச்சாணி கொம்பை தொட முடியும். ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு குணாம்சங்களையும் அவை தன்னிடம் இருக்க வேண்டிய அளவுக்கு இல்லாமல் இதில் ஸ்டாலின் கோட்டை விட்டு விட்டார் என்றால், மோடி வித்தைகள் இல்லாமலேயே ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டைப் பக்கமே போகாமலேயே தனது அரசியல் வாழ்வை திமுக தலைவர் என்ற பதவியோடு மட்டுமே அவர் சுருக்கி கொண்டு விடலாம்.

ஆகவே முடிவு செய்ய வேண்டியது ஸ்டாலின் தான், ஸ்டாலின் மட்டும் தான்!

English summary
DMK leader MK Stalin is lack in political acumen like his father and party president M Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X