டாடா காட்டத் தயாராகும் மூன்று மாசெக்கள்… கலக்கத்தில் திமுக தலைமை
சென்னை: அதிமுகவை விட 20 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய திமுகவில் அடுத்தடுத்த நிகழப்போகும் நிகழ்வுகள் சற்று அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கப்போகிறதாம்.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அதிமுகவின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்களை தங்கள்பக்கம் இழுத்தனர். அதேபோல ஒரு காட்சி தற்போது அதிமுக தரப்பில் இருந்து நிகழப்போகிறதாம்.
இதற்காக முதற்கட்டமாக தென்மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஜூன் 3
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தேர்தல் தோல்விக்குப் பிறகு கொண்டாடப்படும் பிறந்தநாள் மட்டுமல்ல கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த மகன் அழகிரியை எதிர்நோக்கி கொண்டாடப்படும் பிறந்தநாள் இது என்கின்றனர்.

கலைஞர் திமுக பாதுகாப்பு இயக்கம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தந்தை மகன் உறவை யாராலும் நீக்கமுடியாது என்பது அழகிரியின் கருத்து. எனவே தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடப்போகிறாராம் அழகிரி. கலைஞர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை உருவாக்கவும் பரிசீலித்து வருகிறாராம் அழகிரி.

கோபாலாபுரம் நோக்கி
ஜூன் 3ம் தேதி தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னை வரும் அவர், மகனாக போய் கோபாலபுரத்தில் தந்தையை சந்தித்து வாழ்த்து சொல்லி ஆசி பெறப் போகிறாராம்.

நீடிக்க முடியுமா?
ஒருவேளை குடும்பத்திற்குள் கண்கள் பனிக்க, இதயம் இனிக்க நிகழ்வுகள் அரங்கேறினால், தாக்குபிடிக்கமுடியாது என்று எண்ணிய தென்மாவட்ட மீசைக்கார மாவட்டசெயலாளர் தாய்கழகத்தில் இணைய தூது விட்டிருக்கிறாராம்.

அழகிரியின் நுழைந்தால்
திமுகவிற்குள் அழகிரி நுழைந்தால் தம்மால் நீடிக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே பாதுகாப்பான இடத்தை நோக்கி பட்டா போட ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

சகோதரகோஷ்டியில்…
இதேபோல கொங்கு மண்டலத்தை சேர்ந்த சாமியானவரும் சகோதரகோஷ்டியில் இழுபடுவதாக எண்ணி அதிமுக பக்கம் தலையை சாய்க்கத் தொடங்கியிருக்கிறாராம். இதேபோலத்தான் கீர்த்தியானவரும் பாதுகாப்பான இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறாராம்.

9 மாசெக்களுக்கு கல்தா
லோக்சபா தேர்தலில் திமுக மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகளில் மாவட்ட செயலாளர்களுக்கு கல்தா கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருவதால் இனியும் இங்கிருந்தால் தங்களின் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும் என்று எண்ணியே வேறு இடம் தேடுகின்றனராம் மாசெக்கள்.

ஆபரேசன் அசைன்மென்ட்
இதனால் கட்சிக்கு வரநினைக்கும் மீசைக்கார அண்ணாச்சியிடம் தனி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அவரும் தனது பழைய தோஸ்துகளான புதுக்கோட்டை பிரமுகர், அல்வா நகர் விஐபியை அழைத்து வருவதாக கூறியுள்ளாராம்.

ஒரிஜினல் திமுக
அதிமுகவில் இருந்து போனவர்களை விட ஒரிஜினல் திமுகவினராக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து தேமுதிகவினரை இழுத்த காலம் போய் திமுகவினர் பக்கம் திரும்பிய காரணம் என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications