"அடுத்த வருஷம் இந்நேரம் இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கணும்” மதுரை பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு
மதுரை: "7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என அடுத்தாண்டு இந்நேரம் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். சூரியன் நிரந்தரமானது, அதேபோல திமுகவும் நிரந்தரமானது. திமுகவை போலவே திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும்." என மதுரை திமுக பொதுக்குழுவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையில் இருபுறங்களிலும் இருந்து பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை முதல் மேயர் எஸ்.முத்துவின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்ட அரங்கம் முன்பு 100 அடி உயர திமுக கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. அதில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்ட அரங்கிற்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடுவோம், தமிழகத்திற்கான நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் ஆறு பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு! ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. 7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என அடுத்தாண்டு இந்நேரம் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்.
100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கழகத்தின் கொடி பறக்கிறது. நூற்றாண்டு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று இந்த 100 அடி கொடி உணர்த்துகிறது. மதுரையை சுற்றி 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கருப்பு சிவப்பு கொடி பறக்கிறது! அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை.
அப்படி இந்த மண்ணில், சமத்துவம் - சுயமரியாதை - சமூகநீதி - ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம்! இனத்துக்காக உரிமைக்குரல் எழுப்புகிறவர்கள் நாம்! கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம்! கொள்கையை பரப்ப கட்சியும் - கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!
இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது... நான் தொடக்கத்தில் சொன்னது போன்றே, இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், "ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!". "இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!". இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது!
உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. "கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை" என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது.
என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்! உங்கள் மேல் மட்டுமல்ல, இந்த பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் - வெயில் மழை பார்க்காமல் - தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்.
உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதலமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் - மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்! இப்படிப்பட்ட தொண்டர்கள் காத்து நிற்பதால்தான், 75 ஆண்டுகளைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி, அதே வேகத்துடன் நடைபோடுகிறோம்!
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும்.
தி.மு.க.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், * அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், * ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், * உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்! இந்த பொதுக்குழுவுக்கு அந்த கோடியில் இருந்து, 7 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள்! இது மாபெரும் மரியாதை! காலம் காலமாக கழகத்துக்கு உழைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல் - ஒன்றியச் செயலாளர் ஆக முடியாமல் - நகரச் செயலாளர் ஆக முடியாமல் - நிர்வாகி ஆக முடியாமல், மறைந்தவர்கள்தான் கழகத்தில் அதிகம். தலைவர் கலைஞரை பக்கத்தில் நின்றுகூட பார்க்காமல் மறைந்தவர்கள் அதிகம். அண்ணா அறிவாலயத்தின் வாசல் படியைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகள் அதிகம்." எனப் பேசியுள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications