கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்கே: கனிமொழி
செங்கோட்டை: திமுக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தொடர்பாகத் தான் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் திமுக சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு சான்றளிக்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் 70 லட்சம் பேர் மதுவால் சீரழிந்துள்ளனர். மது ஒழிப்புக்கு எதிராக போராடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுக அரசைப் பற்றி எழுதினால் மட்டுமல்ல பேசினாலே வழக்கு. தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குத் தான்.
சென்னையில் பெய்த மழைக்கு ஜெயலலிதா அரசு காரணமில்லை. வெள்ளத்தால் மக்கள் இறந்ததற்கு காரணம் அவரது அரசு தான். ஆனால் மத்திய அரசு மழை பெய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் எச்சரிக்கை செய்தும் தமிழக அரசு கவனக் குறைவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டது தான் காரணம். கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் வெள்ளம் வந்திருக்காது.
வெள்ளம் வடிந்திருக்கும் நள்ளிரவில் மனசாட்சியே இல்லாமல் முதல்வர் உத்தரவுக்காக காத்திருந்து ஏரியை திறந்து விட்டது தான் இந்த அழிவுக்கு காரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ரூ. 5 ஆயிரம் தான் கொடுத்தார்கள். மதுவை ஒழிக்க ஒவ்வொரு முறையும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போதும் சட்டமன்றத்தில் அமைச்சர் மதுவால் அரசுக்கு வருமானம் வருவதை இழக்க மாட்டோம், இந்த வருமானம் அரசுக்கு தேவை என்று கூறுகிறார்.
மதுவுக்கு எதிராக மக்கள், மாணவர்கள், பெண்கள் என எல்லோரும் போராடியும் தீர்வு இல்லை. சசி பெருமாள் மதுவுக்கு எதிராக போராடி தனது உயிரையும் விட்டார் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி கூறுகையில்,
விழுப்புரம் அருகே சின்னசேலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்ட காரணங்களை சிந்திக்க வேண்டும். மாணவிகள் பலமுறை நிர்வாகத்தால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கட்டணம் கூட மிக அதிகமாக அவர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரசீதுகள் கூட தரப்படவில்லை. இதற்கு முன்பும் மாணவர்கள் இங்கு தீக்குளித்து தங்கள் பக்கம் அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் அரசின் கவனம் அல்லது அதிகாரிகளின் கவனமோ திரும்பவில்லை. அந்த காரணத்தால் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தங்கள் பெயரை கெடுத்து விடாதீர்கள். நாங்கள் தற்கொலை செய்ததற்காண காரணம் இதுவென்று எழுதி வைத்து இறந்து விட்டனர். இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கியிருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
மாணவிகளின் மரணத்திற்கு கண்டிப்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த அரசில் பல விசாரணை கமிஷன்கள் போடப்பட்டும் எதிலும் நியாயம் கிடைக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் விசாரணைக்காக ஆளுநரிடம் கலைஞர் மனு அளித்துள்ளார். விசாரணை நடைபெறவில்லை என்றால் திமுக ஆட்சியில் கண்டிப்பாக விசாரணை நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications