நீதான் கமிஷன் வாங்கிருப்ப.. நகராட்சி துணை தலைவர் திமுக கவுன்சிலர் இடையே பயங்கர மோதல்: ஊட்டியில் பரபர
நீலகிரி: ஊட்டி நகராட்சி கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவரும், திமுக கவுன்சிலரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாதந்தோறும் நடைபெறும் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. உதகை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினர். அப்போது உதகை நகராட்சி சந்தை இடிக்கப்பட்டு, மாற்று இடத்தில் வியாபாரிகளுக்கு கடை வழங்கப்பட உள்ளது தொடர்பாக நகர் மன்றத் துணைத் தலைவர் ரவிக்குமார் பேசினார்.

உதகை நகராட்சி துணை தலைவரான திமுகவைச் சேர்ந்த ரவிக்குமார் பேசுகையில் தமிழக அரசால் உதகை நகராட்சி சந்தை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்டி லெவல் பார்க்கிங்கோடு அமைக்கப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினரையும் அமைச்சரையும் சுட்டிக்காட்டி குறை கூறி வருகின்றனர். பாராட்ட மனமில்லை என்றால் விட்டு விடுங்கள் ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்? இது அரசுக்கு இது மிகப்பெரிய அவப்பெயர் எனத் தெரிவித்தார்.
அப்போது எழுந்த உதகை நகராட்சி 18வது வார்டு திமுக உறுப்பினர் முஸ்தபா, தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் கூடுதலான கடைகள் இல்லை, வியாபாரிகளை அழிப்பது தான் வளர்ச்சியா? என கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக துணைத் தலைவர் ரவி நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி என்றால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுக்கான கடைகள் அங்கு கிடைக்கவில்லை என்ற ஒரே நோக்கில் தூண்டி விடுகிறீர்களா? என்றார்.

அதற்கு திமுக கவுன்சிலர் முஸ்தபா, நீ கமிஷன் பெற்றுக்கொண்டு அந்த வேலையை செய்கிறாய் எனக் கூறினார். அதற்கு நகர் மன்ற துணைத் தலைவர் நீதான் கமிஷன் வாங்கி இருப்பாய் என்றார். திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற துணைத் தலைவரும், திமுக கவுன்சிலரும் நீ தான் கமிஷன் வாங்கி இருப்பாய், என ஒருவரை ஒருவர் மாற்றி ஒருமையில் கடுமையாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், திமுக கொண்டுவரும் வளர்ச்சித் திட்ட பணியை திமுககாரனே அசிங்கப்படுத்துறான். இது கேவலமாக இருக்கிறது எனக் கூறினார். தொடர்ந்து, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த இருவருக்கு இடையே நகராட்சிக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. பின்னர் இருவரையும் மற்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications