Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுக்கு தன்மானமே இல்லை? 'நோட்டா' கட்சியான பாஜகவை ஏன் வளர்க்கனும்? பிரகாஷ்ராஜ் சரமாரி சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்த்தாக வேண்டும்; அதிமுகவினருக்கு தன்மானமே இல்லையா? கொள்கையே இல்லையா? நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கும் பாஜகவை ஏன் அதிமுக வளர்த்துவிட வேண்டும்? என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன், நடிகர் பிரகாஷ்ராஜூடன் நடத்திய உரையாடலில் இடம் பெற்றவை: காஷ்மீர் இந்தியாவுடையதுதான். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

Prakash

பாதுகாப்பு குறைபாடா?

பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் மனிதர்கள் கிடையாது. பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

அரசாங்கத்தை கேள்வி கேட்பது ஏன்?

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. ஆனால் அரசாங்கம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே.. ஆகையால்தான் அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம்.

மோடி வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்

லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

PG

தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பு

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மோடி பேச்சுக்கு எதிர்ப்பு

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜகவின் வக்பு சட்டம்

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வக்பு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

பாஜகவை பற்றி அதிமுகவுக்கு தெரியாதா?

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜகவிடம் அதிமுக உஷாராக இருக்கனும்

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன்.

என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக

தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை. ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்தவிடமாட்டேன்.

பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கிறது அதிமுக?

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது. நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்?

2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான்

2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+