Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக் கடைகளால் மாணவர்கள் சீரழிகிறார்கள்.. ராமதாஸ் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரட்டுத்தனமான வீடியோ விளையாட்டுக்கள், கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஊடக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மாணவர்கள் நாடும் போது கலாச்சார சுழலில் சிக்கி சீரழியத் தொடங்குகின்றனர். தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள் மாணவர்களின் சீரழிவு வேகத்தை மேலும் அதிகரிக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss vents his anger on the society for class room murders

அருப்புக்கோட்டையில் வகுப்பறையில் மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த அப்பாவி மாணவன், அதேபள்ளியின் முன்னாள் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். கல்வியும், கலையும் செழிக்க வேண்டிய வகுப்பறைகளில் வன்முறை தலைவிரித்தாட தொடங்கியிருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கல்வி நிறுவனங்கள் கலவரக் கூடங்களாகி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அதே கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின் கடந்த 12ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவன் அதேவகுப்பில் பயிலும் மாணவனால் அடித்துக் கொல்லப்பட்டான். இந்த அதிர்ச்சி விலகும் முன்பே பந்தல்குடி பள்ளியில் ஒருபாவமும் அறியாத பாலகன் படுகொலை செய்யப் பட்டிருப்பது பதற வைக்கிறது.

கத்தி முனையைவிட பேனா முனை வலிமையானது என்பார்கள். ஆனால், பேனா பிடிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியும், அரிவாளும் தூக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால், அதற்கான பின்னணி காரணங்கள் குறித்து சமூக நலனிலும், எதிர்காலத் தலைமுறையினரின் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் ஆராய வேண்டியது அவசரத் தேவையாகும்.

மாணவர்கள் மலர்களைப் போன்றவர்கள்.... அவர்களை மிக மென்மையாக கையாள வேண்டியது அவசியமாகும். மாணவர்கள் அனைவரையும் தங்கள் குழந்தைகளைப் போல நினைத்து ஆசிரியர்கள் பாசத்தையும், கண்டிப்பையும் சம விகிதத்தில் காட்டி வளர்த்ததையும், தாய், தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்து ஆசிரியர்களை மாணவர்கள் வணங்கியதையும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை பார்க்க முடிந்தது.

ஆனால், கல்வி எப்போது வணிகமயமானதோ அப்போதே இந்தக் கலாச்சாரமும் மறைந்து, ஆசிரியர்களை மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் அவலக் கலாச்சாரம் தொடங்கிவிட்டது. இந்த அவல நிலைக்கு மாணவர்களை மட்டுமே குறை கூற முடியாது. அரசு, பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம், ஊடகங்கள், பாடத்திட்ட வகுப்பாளர்கள் என அனைவருக்குமே இப்பாவத்தில் பங்கிருக்கிறது.

கடந்த காலங்களில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் இருந்தால், அவற்றில் நீதிபோதனைக்கும், விளையாட்டிற்கும் தலா 2 பாடவேளைகள் ஒதுக்கப்படுவது வழக்கம். கல்வி வணிகமயமாகி விட்ட சூழலில் நீதிபோதனை அடியோடு ஒழிக்கப்பட்டு, விளையாட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு மனப்பாடப் படிப்புக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒருகாலத்தில் ஆசிரியர் வராத பாட வேளைகள் அனைத்தும் விளையாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது விளையாட்டுக்கான பாடவேளைகள் அனைத்தும் மனப்பாட பாடத்திற்கு ஒதுக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. விளையாட்டு பாடவேளைக்கான சீருடையுடன் செல்லும் மாணவர்கள் ஆடை கசங்காமல் திரும்புவதும், அவற்றுக்கு மாற்றாக அவர்களின் பாடப்புத்தகங்கள் கசங்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

விளையாடக் கூட அனுப்பாமல் பாடம் சொல்லித் தருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான் அதிக கட்டணம் வசூலிக்க முடியும் என பள்ளி நிர்வாகங்கள் கருதுவதும், தங்களின் பிள்ளைகள் நல்ல மனிதர்களாக உருவாவதைக் காட்டிலும் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவானால் போதும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பதும் தான் இந்த அவலநிலைக்கு அடித்தளமாக அமைகின்றன.

அனைத்துப் பெற்றோருமே தங்களின் குழந்தைகளை தேர்வுப் பந்தயத்தில் கட்டாயவெற்றி பெறும் பந்தயக் குதிரைகளாகத் தான் வளர்க்கின்றனர் என்பதையோ, தேர்வுப்பந்தயத்தில் பின்தங்கினால், ஓட்டப்பந்தயத்தில் தோற்கும் குதிரையைவிட மோசமாக தண்டிக்கின்றனர் என்பதையோ மறுக்க முடியாது.

காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு- மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா என்றார் பாரதியார். ஆனால், காலை 7 மணிக்கே தொடங்கும் பள்ளிக்கு அதிகாலையிலேயே ஆயத்தமாகும் நிலையில் உள்ள மாணவனால் பாரதியின் அறிவுரைகளை எப்படி பின்பற்ற முடியும்? ஒருபுறம் பள்ளியின் நெருக்கடி, மறுபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு என பல முனைகளிலிருந்து நசுக்கப்படும் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதற்கு வடிகால் தேடுவதற்காக முரட்டுத்தனமான வீடியோ விளையாட்டுக்கள், கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஊடக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மாணவர்கள் நாடும் போது கலாச்சார சுழலில் சிக்கி சீரழியத் தொடங்குகின்றனர். தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள் மாணவர்களின் சீரழிவு வேகத்தை மேலும் அதிகரிக்கின்றன.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பது ஒருபுறமிருக்க, கல்லூரிப் படிப்பின் ஆழத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் இன்னொருபுறம் தொடர்கதையாகி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும் மோசமாகிவிடும். இந்த நெருக்கடியிலிருந்து மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தில் நீதிபோதனையையும், விளையாட்டையும் கட்டாயப்பாடமாக்க வேண்டும். அத்துடன் நீதி, நேர்மை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் சுமையற்ற, சுகமான கல்வி முறையால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை உணர்ந்து, சிறந்த கல்வி முறையை வழங்குவதன் மூலம் மாணவர்களை நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாக்க அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் உதவி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+