கோவையில் குடிபோதையில் மனைவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
கோவை: கோவையில் குடிபோதையில் மனைவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல்(37). நகைப்பட்டறை தொழிலாளி. அவரது மனைவி பாக்யலட்சுமி(30). அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
வடிவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் தினமும் குடித்துவிட்டு வருவதால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும், பாக்யலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் அடுப்பில் கொதித்த சமையல் எண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டார். இதில் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த பாக்யலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து பாக்யலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வடிவேல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications