தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.. பரபரப்பு
தென்காசி: சங்கரன் கோவிலில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து செல்ல அனுமதி அளித்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் அல்லது பரிசுப்பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், இன்று தென்காசி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சில நிமிடங்கள் இந்த சோதனை நடைபெற்றது. இது குறித்த விவரம் வருமாறு:-
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வந்து இருந்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலமாக பிரசாரம் செய்தார். திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து இன்று காலை முதலே தென்காசி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
மாலை நேரத்தில் சங்கரன் கோவிலில் பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று கொண்டு இருந்தார். உதயநிதி ஸ்டாலினின் கார் கரட்டுமலை சோதனைச்சாவடியை கடந்த போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அமைச்சர் உதயநிதியின் காரை மடக்கி சோதனை நடத்தினர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். காரின் பின்பக்க டோரை திறந்து அதில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications