காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தல்... சென்னையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர ஆளுநர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட விவசாயிகள் முயன்றனர்.

விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நியாயமான கோரிக்கைக்காக போராடும் தங்களை போலீசார் தடுத்து நிறுத்துவது கண்டனத்திற்குரியது என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடியதால் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளை கைது செய்யும் பொருட்டு ஏராளமான போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. விவசாயிகளின் திடீர் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் விவசாயிகள் கலைந்து செல்லாததால் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மார்ச் 9ம் தேதி நடைபெறும் 4 மாநில அரசுகளின் கூட்டம் சட்டத்திற்கு எதிரானது என்று பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார், இனியும் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications