திருவண்ணாமலை ராஜசேகரன் முதல் கைலாசா அதிபர் வரை! ரூ.4,000 கோடி சொத்து யாருக்கு? யார் நித்தியானந்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா.. தற்போது கைலாசா என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்திக் கொண்டவராக இருக்கும் நித்தியானந்தா குறித்த பல தகவல்கள் சர்ச்சையாகி இருக்கின்றன.

திருவண்ணாமலையில் எளிய குடும்பத்தில் பிறந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். 1978-ம் ஆண்டு பிறந்த, நித்தியானந்தாவுக்கு தற்போது 48 வயதாகிறது.

ஆன்மீக தொடர்கள்

திருவண்ணாமலையில் தமது 12 வயதிலேயே ஆன்மீக ஞானம் பெற்றுவிட்டதாக கூறிக் கொண்டவர் நித்தியானந்தா. பாபாஜி என்ற சாமியார் தமக்கு காட்சியளித்து பரமஹம்ச நித்தியானந்தா என பெயர் சூட்டியதாகவும் பிரசங்கம் செய்தார் நித்தியானந்தா. இதன் பின்னர் 2000-ம் ஆண்டுகளில் நித்தியானந்தா, ஊடகங்களில் இடம் பிடித்தார். கதவை திற காற்று வரட்டும் போன்ற ஆன்மீக தொடர்கள் மூலம் பக்தர்களின் பேராதரவைப் பெற்றார்.

கண்டம் விட்டு கண்டங்களில் ஆசிரமங்கள்

நித்தியானந்தாவை நாளும் தேடி வரும் பக்தகோடிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கை தாண்டியது; இதனால் பக்த கோடிகளுக்காக மாநிலங்களில் எல்லாம் ஆசிரமங்கள் அமைத்தார். அவற்றில் ஒன்றுதான் கர்நாடகாவின் பிடதி ஆசிரமம். பின்னர் மாநிலங்களைத் தாண்டி கண்டங்கள் விட்டு கண்டங்கள் என உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களுடன் ஆலமரமாக விரிந்து பரந்தது சாமியார் நித்தியானந்தாவின் ஆன்மீகப் பணி. இதனால் நித்தியானந்தாவின் ஆசிரமங்கள், அவற்றின் சொத்துகள் மதிப்புகள் அப்போதே பல நூறு கோடி ரூபாயை தாண்டி செழித்தது.

ஒற்றை வீடியோவால் சரிந்த சாமியாரின் சாம்ராஜ்யம்

பிரம்மாச்சாரியான சாமியார் நித்தியானந்தா பற்றி 2010-ல் வெளியான ஒற்றை வீடியோ ஒட்டுமொத்த அவரது சாம்ராஜ்யத்தையும் சரித்த தொடக்கப் புள்ளியானது. இங்கிருந்துதான் நித்தியானந்தா மீது பலாத்கார புகார்களும் அணிவகுக்க சர்வ வல்லமை படைத்தவராக பக்தர்கள் நம்பிய ஆன்மீக அவதார புருஷர், சாமானியர் போல வட இந்தியாவில் பதுங்கி இருந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கர்நாடகா போலீஸ். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான பின்னர் நித்தியானந்தாவின் ஆன்மீக உலகம் மேலும் விரிவடைந்தது.

மதுரை ஆதீன சர்ச்சை

2012-ம் ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் பிரசித்தி பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக பிரகடனம் செய்யப்பட்டார் நித்தியானந்தா. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடிக்க, ஆதீனமாக முடிசூட்டியதும் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் மதுரை ஆதீனத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படிகளேறினார் சாமியார் நித்தியானந்தா.

இந்தியாவில் இருந்து வெளியேறிய நித்தியானந்தா

2014-ம் ஆண்டு நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இளம் பெண் மரணமடைந்த விவகாரம் அவருக்கு மிகப் பெரும் சிக்கலைத் தந்தது. சிபிஐ கைகளுக்குப் போன இந்த வழக்கில் ஏராளமான பெண்கள் வரிசைகட்டி வாக்குமூலம் தந்து அசரவைத்தனர். இப்படி நீதிமன்ற வழக்குகளை, விசாரணை அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொண்ட நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இப்படி பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான சில மாதங்களிலேயே இந்தியாவை விட்டு தப்பி வெளியேறினார் நித்தியானந்தா.

சமூக வலைதளங்களில் லைவ் பிரசாரம்

2019-ம் ஆண்டு சமூக வலைதளங்கள் மேலாதிக்கம் செலுத்திய நிலையில் ஃபேஸ்புக், யூ டியூப், இன்றைய எக்ஸ்- அன்றைய ட்விட்டர் உள்ளிட்டவைகள் மூலம் சாமியார் நித்தியானந்தா தமது ஆன்மீக பிரசங்கத்தை அரங்கேற்றி வந்தார்.

கைலாசா தனிநாடு பிரகடனம்

இதன் உச்சகட்டமாக உலகத்தையே அதிரவைத்தார் நித்தியானந்தா. ஆம் கைலாசா என்ற தனி நாட்டையே தாம் உருவாக்கிவிட்டதாக பிரகடனம் செய்தார். நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு தனி கொடி, தனி ரூபாய். தனி பாஸ்போர்ட், அமைச்சகங்கள் என சகலவற்றையும் அறிவித்தார் நித்தியானந்தா. ஆனாலும் எப்போதும் தமது கைலாசா தனிநாடு எங்கே இருக்கிறது என்பதை மட்டும் ஒருபோதும் நித்தியானந்தா வெளிப்படுத்தவும் இல்லை.

ஐநா வரைக்கும் போன நித்தியானந்தாவின் கைலாசா

அதேநேரத்தில் உலகின் பல முக்கியமான நகரங்களுடன் தமது கைலாசா நாடு ஒப்பந்தம் செய்திருக்கிறது; ஐநா கூட்டங்களில் பங்கேற்கிறது; பல்வேறு நாட்டு தூதர்களை தமது பிரதிநிதிகள் சந்திக்கின்றனர் என இடைவிடாமல் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டுக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

மரணத்தின் பிடியில் வீடியோ

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்தியானந்தா திடீரென தாம் மரண படுக்கையில் இருப்பதாக கூறினார்... மரணத்தின் தருவாயில் சிக்கியதாகவும் வீடியோக்களை இடைவிடாமல் வெளியிட்டும் வந்தார். பின்னர் நலமுடன் தேறியபடி தமது பிரசங்கங்களையும் தொடர்ந்தார்.

பேச்சு தமிழ் பிரசங்கி

நித்தியானந்தா பொதுவாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவைகளில் சரளமாக பிரசங்கம் செய்பவர். தமிழில் சாமானியரைப் போல பேச்சு மொழியில்தான் பிரசங்கம் செய்பவர். தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் சில நேரங்களில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நித்தியானந்தா.

சர்ச்சைகள்.. சர்ச்சைகள்

தற்போது சமூக வலைதளங்களால் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட சர்வதேச ஊடகங்களில் நித்தியானந்தாவின் பெயர் அடிபட்டது. பொலிவியா நாட்டில் அந்நாட்டின் பழங்குடி மக்களின் 11 லட்சம் ஏக்கர் நிலத்தை 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு ஏமாற்றி ஒப்பந்தம் போட்டனர் நித்தியானந்தாவின் சீடர்கள் என்பதுதான் அந்த சர்ச்சை. இதனையடுத்து நித்தியானந்தாவின் சீடர்களை பொலிவியாவில் இருந்தே வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு.

இதே நேரத்தில் தமிழ்நாட்டின் ராஜபாளையம் பகுதியிலும் நித்தியானந்தா சீடர்கள் ஆசிரம நிலம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அதற்கும் கூட கண்டனம் தெரிவித்து சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவுக்கு பின்னர்?

தற்போது நித்தியானந்தா குறித்த பல செய்திகள் வலம் வருகின்றன. நித்தியானந்தாவுக்கு அடுத்ததாக அவரது ஆசிரமங்களை குறிப்பாக கைலாசா தேசத்தை யார் எப்படி நிர்வகிப்பர்? என்பது பெரும் கேள்விக்குறி. இன்றைய நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரம சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.4,000 கோடி என்கின்றன சில ஊடக தகவல்கள். இந்த பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் என்னவாகும்? யாரால் இந்த சொத்துகள் நிர்வகிக்கப்படும்? நித்தியானந்தாவுக்கு மிக நெருக்கமான சில பிரபலங்கள்தான் இந்த சொத்துகளை கையாளப் போகிறவர்களா? என்பது தெரியவில்லை.

நித்தியானந்தா எந்த ஆண்டு பிறந்தார்

நித்தியானந்தா 1978-ம் ஆண்டு பிறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+