4 நாட்கள் நீடித்த 'பஸ் ஸ்டிரைக்' வாபஸ்! போக்குவரத்து துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு ஒப்பந்தம், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் 'பஸ் ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் பாதி அளவுக்குத்தான் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஆளும் அண்ணா திமுக தொழிற்சங்கத்தினரும் கூட இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் நேற்று மாலை தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 11 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஓரிருநாட்களில் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டது. மேலும் பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இதனை ஏற்று பஸ் ஸ்டிரைக் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அனைத்து தொழிற்சங்களும் அறிவித்துள்ளன. இதனால் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த பஸ் ஸ்டிரைக் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
இந்த பேச்சுவார்த்தை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காத்தான் கடந்த 28-ந் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. அந்த வேலைநிறுத்தத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச வேண்டுமானால், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று கடிதம் கொடுக்க வேண்டும் என்று அரசு கேட்ட அடிப்படையில், அந்த கடிதத்தை நேற்று வழங்கப்பட்டது.
இன்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அடுத்த ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை கமிட்டியை நாங்கள் அமைத்து விடுகிறோம். பேச்சுவார்த்தை கமிட்டியோடு நீங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்.
இந்த வேலைநிறுத்தத்தையொட்டி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். விடுதலை செய்யப்படும்போது யார் மீதேனும் கிரிமினல் வழக்குகள் இருந்தால், அந்த வழக்கில் இருப்பவர்களும் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஆவண செய்யப்படும். வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இந்த அரசு எடுக்காது. சகஜ நிலைக்கு திரும்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.
கடந்த 26, 27 தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாங்கள் எழுப்பிய சில கோரிக்கைகளையும் ஏற்பதாக நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அவை குறித்தும் நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம் என்று இன்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் இணங்கி வந்திருக்கின்ற சூழ்நிலையில், வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொள்வது என்று 11 தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
தொழிலாளர்களின் மகத்தான ஒற்றுமைக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியின் பின்னணியில் வேலை நிறுத்தத்தை திரும்பப்பெறுவது என்ற இந்த முடிவை அறிவிக்கிறோம்.
இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications