சுயமரியாதை சுடரொளி வி.பி. சிங்..சமூக நீதி காவலருக்கு சென்னையில் கம்பீர சிலை..முதல்வர் அறிவிப்பு
சென்னை:
வி.பி. சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது என்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதியை சொந்த சகோதரர் போல நினைத்தவர் வி.பி. சிங் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வி.பி.சிங் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

படிப்படியாக அரசியலில் முன்னேறி தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனார். அவர் 11 மாதங்கள்தான் பிரதமாக இருந்தாலும் மகத்தான சாதனை படைத்தார். அதனால்தான் அவரை போற்றிக்கொண்டிருக்கிறோம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப மண்டல் கமிஷன் அமைத்து மத்திய அரசு பணியிடங்களில் 27 சதவிகித இடங்களை அமல்படுத்திய சமூக நீதி காவலர்.
மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தப்பட்ட போவதாக கம்பீரமாக அறிவித்தார். அதுதான் அவரது பதவிக்கு நெருக்கடியாக அமைந்தது. சில நேரங்களில் வாழ்வதை காட்டிலும் மரணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது என்று கூறி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் சுயமரியாதை சுடரொளி வி.பி. சிங் என்று புகழாரம் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

தூக்கில் போட்டுக்கொள்ளுங்கள் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கொடுங்கள் என்று சொன்னவர். தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கான தொடக்கப்புள்ளி. உழவர் பிரச்சினை தீர்க்க குழு என பல சாதனைகளை செய்து காட்டியவர். தமிழ்நாட்டினை சொந்த ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தார். கருணாநிதியை சொந்த சகோதரராகவே மதித்தார். வி.பி. சிங்கின் சாதனைகளை பாராட்டி அவருக்கு சென்னையில் முழு உருவ கம்பீரமான சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications