கள்ளக்குறிச்சி மாணவி எழுதியதாக சிக்கிய கடிதம்.. எங்கள் மகளோட கையெழுத்தே இல்லை.. மறுக்கும் பெற்றோர்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாணவி மரண விவகாரத்தில் அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் உள்ள கையெழுத்து தங்கள் மகளுடையது அல்ல என பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

நீதி வேண்டும்
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சமூகவலைதளங்களில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேற்று முன் தினம் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

கலவரம்
ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளிக்கு சிலர் தீ வைத்தனர். அங்கிருந்த பேருந்துகள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பள்ளியே வன்முறை களமாக மாறி இருந்தது.

மாணவியின் இறப்பில் சந்தேகம்
இந்த சம்பவத்தில் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்றும் பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவி இறப்பதற்கு முன்னர் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் நான் நன்றாகத்தான் படிப்பேன்.

சமன்பாடுகள்
வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் உள்ளன. என்னால் அவற்றை படிக்க முடியவில்லை. அதனால் அந்த வேதியியல் ஆசிரியர் எனக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கிறார். ஒரு நாள் இந்த வேதியியல் ஆசிரியர் கணித ஆசிரியரிடம் நான் நன்றாகவே படிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார். அதனால் அவரும் எனக்கு மன அழுத்தம் தர ஆரம்பித்தார்.

விடுதியில் படிக்கலையா
விடுதியில் என்ன செய்கிறாய், படிக்க மாட்டாயா என இருவரும் என்னை மாறி மாறி திட்டுகிறார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து மற்ற பாட ஆசிரியர்களிடம் நான் சரியாக படிக்க மாட்டேன் என கூறி என்னை மன உளைச்சலுக்குள்ளாக்குகிறார்கள்.
Recommended Video

கட்டணத்தை கொடுத்துடுங்கள்
நான் சரியாக படிப்பதில்லை என ஆங்கில ஆசிரியர் என்னிடம் வந்து கேட்கிறார். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாந்தி மேடம் (பள்ளி தாளாளர்) உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை. நான் ஹாஸ்டலுக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆச்சு. எனவே இந்த ஆண்டு எனக்கு கட்டப்பட்ட அனைத்து கல்வி கட்டணத்தையும் விடுதி கட்டணம், புத்தக கட்டணத்தையும் எனது அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிடுங்கள். ப்ளீஸ் சாரி அம்மா, சாரி அப்பா என அந்த மாணவி எழுதியிருந்ததாக கடிதம் வெளியானது. இந்த நிலையில் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து எங்கள் மகளின் கையெழுத்தே இல்லை என மாணவியின் பெற்றோர் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications